மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
Share
சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 2 பேர் தங்கள் உள்ளாடை மற்றும் உடைமைகளுக்குள் தங்க செயின்கள் மற்றும் வளையல்களை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் அபுதாபியில் இருந்து விமானத்தில் வந்த மற்றொரு பயணியிடம் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் மொத்தம் ரூ.1.67 கோடி மதிப்பிலான 2.66 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட நபர்களை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.