வெள்ளப்பெருக்கு குற்றாலம் அருவியில் குளிக்க தடை
Share
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் சாரல் மழை தொடர்ச்சியாக பெய்கிறது. இதனைத் தொடர்ந்து தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்கிறது. நேற்று மாலை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறை தடை விதித்தனர். இதன் காரணமாக குற்றாலம் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் காலையில் வெள்ளப்பெருக்கு குறையும், அருவிகளில் ஆனந்தமாக குளிக்கலாம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்திருந்தனர். ஆனால் அந்த எண்ணத்திற்கு மாறாக தொடர் சாரல் மழை குற்றாலத்தில் பெய்தது. இதன் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. காலையில் புலி அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அங்கும் நீர் வரத்து அதிகரித்தது. அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறையாததால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் எந்த அருவியிலும் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் திரும்பிச் சென்றனர்.