கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் 35வது ஆண்டு நிறைவு விழாவில் வெற்றியாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பெற்றன
கடந்த 18-04-2026 சனிக்கிழமையன்று மாலை கனடாவின் மார்க்கம் நகரின் ஹில்ரன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்ற ‘கனடிய தமிழர் வர்த்தக சம்மேளன’த்தின் 35வது ஆண்டு நிறைவு விழாவும் வர்த்தகத்துறை மற்றும் சமூக செயற்பாடுகள் சேவைகள் ஆகியவை சார்ந்த வெற்றியாளர்களுக்கான விருதுகளும் வழங்கும் நிகழ்ச்சியும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை மண்டபத்தில் அமரவைத்து இனிய இசை நிகழ்ச்சியோடும் இராப்போசன விருந்தோடும் நிறைவு செய்ததை பாராட்ட வேண்டும்.
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தற்போதைய தலைவரும் கணக்காளருமான அரி அரிஅரன் அவர்கள் தலைமையில் இயக்குனர் சபையின் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கான உபு தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த விழாக்களை வெற்றிகரமாக நடத்த தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்..
நிகழ்ச்சிகளை செல்வி சுவேதா பரராஜசிங்கம் தொகுத்து வழங்கினார். கனடிய மத்திய அரசின் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தனது உரையில் வர்த்தக சம்மேளனத்தின் கடந்த கால வரலாற்றையும் எமது தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சியையும் தெளிவாக எடுத்துரைத்தார். அவரும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து விருதுகள் வழங்கும் அமர்வு சிறப்பாக இடம்பெற்றது.
மேடையில் விருதுகள் வழங்கப்பெற்றபோது தலைவர் அரி அரிஅரன் அவர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் ஆகியோர் மேடையில் விருதுகள் வென்ற சாதனையாளர்களை கௌரவித்தார்கள்.
சிறந்த வர்த்தகத்துறை சாதனையாளர் விருது தொழிலதிபர் சுதர்சன் பரமசாமி அவர்களுக்கும்
சிறந்த பெண் வர்த்தகத்துறை சாதனையாளர் விருது தொழிலதிபர் மஞ்சுளா சிவராஜாஅவர்களுக்கும்
சிறந்த இளையோர் வர்த்தகத்துறை சாதனையாளர் விருது சீன் பரமலிங்கம் அவர்களுக்கும்
சிறந்த சந்தைப்படுத்தல் வர்த்தக சாதனையாளர் விருது வரன் கருணாநந்தன் அவர்களுக்கும்
சிறந்த சமூக சேவையாளர் விருது சமூகச் செயற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி அவர்களுக்கும் சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது திருமதி சுமி பிரபாகரன் அவர்களுக்கும் வழங்கப்பெற்றன.
இந்த பெருவிழாவின் இறுதியில் தென்னிந்தியப் பாடக பாடகிகளும் கனடிய பாடக பாடகிகளும் பங்கெடுத்த சைனர்ஸ் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சி பார்வையாளர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்தது என்றால் அது மிகையாகாது.