நல்ல தீர்மானமும் கவனிக்கப்படாத முக்கிய விடயங்களும்

Share

ந.லோகதயாளன்.

போரின் காரணமாக முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று ஏதிலிகளாகப் வாழும் இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடையகற்றல் வசதிகளை வழங்குவதற்கு இலங்கை அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே 2026-08-11 அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

அதாவது யுத்த காலத்தில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் மூலமன்றியும் முறையான கடவுச்சீட்டுகள் இன்றியும் தமது உயிரை காக்க இந்தியாவுக்குச் சென்ற பலர் அங்கு ஏதிலிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) ஊடாகத் தன்னார்வமாக மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இவர்களை, சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
அதில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று, அங்குள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் இலங்கையர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்களுக்கு, அரசு உளவுத்துறையின் தடையகற்றல் அறிக்கை பெறப்படும்.

இவர்கள் கொலை, தேசத்துரோகம் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடாதவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்.

தொடர்புடைய நபர்களுக்குத் தற்காலிகப் பயண ஆவணங்கள் வழங்கப்பட்டு, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தின் கீழ் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அங்கீகரிக்கப்பட்ட வழிகள் ஊடாக நாட்டிற்குள் நுழைவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் யுத்தம் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கும், அடையாளப் படுத்தல் மற்றும் உளவுத்துறை தடையகற்றல் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளின்றி நாட்டிற்குள் நுழையச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

அதேவேளை, கொலை மற்றும் தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் துறைமுகம் அல்லது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தமிழகத்தில் தங்கியுள்ள பலர் தாயகம. திரும்ப முன் வருவர் என்பதில் ஐயம் இல்லை. இருந்தபோதும் இந்த தீர்மானத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய பல விடயங்களை ஆராயாது கொண்டு வரப்பட்ட தீர்மானம் என்ற விமர்சனமும் உள்ளது.

இதில் தாயகம் திரும்ப விரும்பும் தம்மை விமானங்கள் ஊடாக அன்றி தனியான கப்பலில் எடைகளின் வரையறையின்றி அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள மக்கள் நீண்டகாலமாக முன் வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் எந்தவொரு கரிசணையும் கொள்ளப்படவில்லை என்பது ஓர் அம்சமாகும்.

இவற்றிற்கு அப்பால் முறையான ஆவணங்கள் இன்றி துறைமுகங்கள் வழியாக அன்றி பயணித்தவர்கள் என வரையறுப்பதன் மூலம் கடல் வழியாக படகுகள் மூலம் பயணித்தவர்கள் என்பது வெளிப்படுகின்றது. தமிழகத்திலே இரு வகையான ஈழ அகதிகள் தங்கியுள்ளனர். அதிலே படகுகள் வழியாக சென்று நேரடி அகதிகள் பதிவின் மூலம் தமிழக அரசினால் பராமரிக்கப்படும் முகாம்களில் சுமார் 60 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளனர்.

இவற்றினை விடவும் கடவுச் சீட்டுகள் மூலம் பயணித்து போரின் காரணமாக அல்லது அச்சம் காரணமாக தாயகம் திரும்பாது தமிழக பொலிஸாரிடம் பதிவுகளை மேற்கொண்டு முகாம்களிற்கு வெளியில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் மட்டுமன்றி வாடகை வீடுகளில் என சுமார் 30 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளனர்.

இவர்கள் தாயகம் திரும்ப முன் வரும்போது இவர்களிற்கான விமானச் சிட்டைகளும் வழங்கப்படுவதும் கிடையாது என்புடன் இந்தியாவில் விசா காலாவதியான காலத்திற்கு ஆண்டிற்கு 3,500 ரூபா (இந்திய நாணயம்) குற்றப்பணம் அறவிடப்படுவது மட்டுமன்றி இந்தியாவின் பல இடங்களிற்கும் நீண்ட காலம் அலைய்ந்தே அனுமதியை பெறுவதை எண்ணியே பலர் பயணத்தை வெறுக்கின்றனர்.

ஏனெனில் அதிகமானோர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் தங்கியுள்ளனர் எனில் ஒருவர் 70 ஆயிரம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை (இந்திய நாணயம்) செலுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை செலுத்தாது தாயகம் திரும்புவதானால் புனர்வாழ்விற்கு பதிவு செய்து அதனை ஏற்று, விசாரணைகள் என சுமார் ஓர் ஆண்டு காலம் காத்திருப்பது மட்டுமல்ல பல தடவைகள் நீண்ட அலைச்சலுடன் தமிழகத்தின் சிறப்பு பிரிவு பொலிஸார், கியூப் பிரிவு மற்றும் பிரதேச காவல் நிலையங்களின் அனுமதி என்ற விடயங்களும் உண்டு. தமிழகத்தில் குற்றப் பிண்ணனியிருப்பின் ஆராயப்படலாம் ஆனால் அவை ஓர் இடமாக கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும். இவை அனைத்தும் முடிந்தாலே யு.என்.எச்.சி.ஆரின் விமானச் சிட்டையை பெற முடியும். பலர் தமது சொந்தப் பணத்திலேயே தற்போது தாயகம் திரும்புகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>