ஒன்ராறியோவில் ஆறாவது ஆண்டை எட்டியுள்ள ‘தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை’

Share

ஒன்ராறியோ சட்டமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு ‘சட்டமூலம் 104’ நிறைவேற்றப்பட்டதனூடாகத் தொடங்கப்பட்ட ‘தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை’ (மே 12 – 18), இந்த 2026ஆம் ஆண்டு தனது ஆறாவது ஆண்டை எட்டியுள்ளது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த மனிதப் பேரவலத்தையும், 1,69,796 க்கும் அதிகமான உயிர்கள் கொல்லப்பட்டும் காணாமலும் ஆக்கப்பட்ட துயரத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு வரலாற்று ஊடகமாக இவ்வாரம் அமைகிறது.

“கல்வி என்பது கடந்த கால நினைவுகளைப் பாதுகாக்கவும், தழும்புகளை ஆற்றவும் நம்மிடமுள்ள மிக வலிமையான கருவி” என இச்சட்டத்தை முன்மொழிந்த அமைச்சர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியதற்கிணங்க, ஒன்ராறியோவின் முன்னணி கல்விச் சபைகள் இவ்வாண்டும் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன.

ஒன்ராறியோ மாநிலத்தில் ‘சட்டமூலம் 104’ நிறைவேற்றப்பட்ட நாள்முதல், தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை கல்விச் சபைகளின் மட்டத்திலும் படிப்படியாக விரிவடைந்து வரும் அங்கீகாரத்தைப் பெற்றுவருகிறது. ரொறன்ரோ கல்விச் சபை (TDSB), ரொறன்ரோ கத்தோலிக்க கல்விச் சபை (TCDSB), யோர்க் பிராந்திய கல்விச் சபை (YRDSB), பீல் பிராந்திய கல்விச் சபை (PDSB), டூரம் பிராந்திய கல்விச் சபை (DDSB) மற்றும் ஒட்டாவா கத்தோலிக்க கல்விச் சபை (OCSB) உள்ளிட்ட மாநிலத்தின் பல முன்னணி கல்விச் சபைகள் கடந்த ஆண்டுகளில் குறைந்தது ஒருமுறையாவது தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்து வரலாற்றுப் பதிவை உருவாக்கியுள்ளன.

அதேவேளை, வோட்டர்லூ (Waterloo), லாரியர் (Laurier), மெக்மாஸ்டர் (McMaster), யோர்க் (York) மற்றும் ரொறொன்ரோப் பல்கலைக்கழகம் (UofT) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இயங்கும் தமிழ் மாணவர் அமைப்புகளும் ஒவ்வோர் ஆண்டும் இந்த வாரத்தை உணர்வுபூர்வமாக அனுசரித்து வருகின்றன. இவ்வாறாக, கல்வி நிறுவனங்களின் இந்த தொடர்ச்சியான அங்கீகாரங்கள், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் வரலாற்றை இளைய தலைமுறையினரிடையே நிலைநிறுத்துவதோடு, நீதி மற்றும் நினைவுகூர்தலுக்கான உலகத் தமிழர் குரலை மேலும் வலுப்படுத்தி வருகின்றன.

இந்த அறிவூட்டற் கிழமையின் மிக முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான அங்கமாக, பிராம்டனில் நிறுவப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் திகழ்கிறது. வகுப்பறைகளில் பாடநூல்கள் வழியாகக் கற்கும் வரலாற்றிற்கு இந்நினைவகம் ஒரு நேரடிச் சான்றாக விளங்குவதால், மாணவர்கள் திரளாக இங்கு வருகை தந்து தமது தேடல்களுக்கான விடைகளையும் ஆழ்ந்த புரிதலையும் பெற்றுச் செல்கின்றனர். அதுமட்டுமன்றி, புலம்பெயர் தேசங்களின் பிற நாடுகளிலிருந்து இங்குள்ள தமிழ் உறவினர்களைக் காண வரும் குடும்பங்கள் கூட, தமது பிள்ளைகளுடன் இந்நினைவகத்துக்கு வருகை தந்து அஞ்சலி செலுத்துவதைத் தமக்கான ஒரு கடமையாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு, கல்விச் சபைகளின் அங்கீகாரமும், மக்களின் உணர்வுகளோடு இணைந்த இந்நினைவகமும் நீதிக்கான நமது இடைவிடாத போராட்டத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ஒரு மாபெரும் அடையாளமாகத் திகழ்கிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>