‘இறுதிப்போரில் துண்டாடப்பட்ட வன்னி நிலங்களில் அடைக்கலம் தேடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலயமாக அப்போதைய இனவெறி மகிந்த அரசாங்கம் அறிவித்து தமிழ் மக்களை ஓரிடத்தில் சேர்த்துவைத்து கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட நாள். ‘முள்ளிவாய்க்கால்’ என்பது பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல, அது அடக்குமுறையின் குறியீடும் கூட.’
எனவே. முள்ளிவாய்க்கால் நினைவுகளை, தமிழ் மக்களிடம் இருந்து பிரிந்தெடுப்பது என்பது தென் இலங்கைக்கும் அதன் நேச சக்திகளுக்கும் அவசரமாகத் தேவைப்படும் ஒன்று. ஆனால், தமிழ் மக்கள், முள்ளிவாய்க்காலை போர்க்குணத்தின் ஓர்மத்தின் பகுதியாகவே மாற்றியுள்ளனர்.தாம் பறிகொடுத்த உறவுகளை நினைவுகூர மாத்திரமல்ல அவர்களுக்கான நீதியை நிலைநாட்டவும் முள்ளிவாய்க்காலை ”மே 18”என ஒரு களமாக மாற்றியுள்ளனர்”—–கே.பாலா
தமது இனத்துக்காக ,உரிமைக்காக, அஹிம்சை வழியில் ,ஆயுத வழியில் போராடிய தமிழர் வரலாற்றிலே ”2009 மே 18” மறக்க முடியாத நீண்ட பெரு வலி கொண்ட நாள். ஈழத்தமிழ் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே கலந்த நாள். கிபிர்விமானங்களினாலும் பல்குழல் பீரங்கிகளினாலும் ஆட்லறிகளினாலும்,கவச வாகனங்களினாலும், பொஸ்பரஸ் குண்டுகள், கொத்துக்குண்டுகளினாலும்,விஷ வாயுக்களினாலும் பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள் பெண்கள், முதியவர்கள் என்ற வேறுபாடுகளின்றி தமிழினம் என்ற காரணத்திற்காக தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.சிங்கள இனவாத அரசின் உச்சக்கட்ட கொடூரம் அரங்கேறிய நாள்.அன்றைய நாளில் முள்ளிவாய்க்காலில் 146,679 தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டு எதிர்வரும் மே 18 ஆம் திகதி 17 ஆண்டுகள் கடக்கின்றன.
இறுதிப்போரில் துண்டாடப்பட்ட வன்னி நிலங்களில் அடைக்கலம் தேடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலயமாக அப்போதைய இனவெறி மகிந்த அரசாங்கம் அறிவித்து தமிழ் மக்களை ஓரிடத்தில் சேர்த்துவைத்து கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட நாள். “முள்ளிவாய்க்கால் என்பது பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல, அது அடக்குமுறையின் குறியீடும் கூட.
முள்ளிவாய்க்கால் மண்ணில் இனஅழிப்பு செய்யப்பட்டவர்களில் எஞ்சியவர்கள் இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு, தரம்பிரிக்கப்பட்டு பலர் காணாமல்போக, தரம்பிரிக்கப்பட்டவர்களில் இன்னும் பலர் சிறைக்கு போக, வரலாறு காணாத தமிழின் அழிப்பினை நிகழ்த்திவிட்டு வெற்றிக் களிப்பில் பேரினவாதம் திளைத்த நாள், களத்தில் வீழ்த்தப்பட்ட பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களின் மார்பினை அறுத்து சிங்களப் படை வெற்றி கொண்டாடிய நாள் .தமிழர் தாயகத்தில் சிங்கள இனவாத அரசின் கொடூரங்கள் அரங்கேறிய அந்த நாட்களின் வலிகள் தமிழர்களின் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, தமிழ் மக்கள், தங்கள் ரத்தத்தை ஆகுதியாக்கி, ஆறாக ஓட விட்ட , வீரமும் கண்ணீரும் ரத்தமும் ஒருங்கே கலந்துள்ள மண்தான் முள்ளிவாய்க்கால் . பல நாடுகளின் ஆயுத உதவியோடு, அசுர பலத்தோடு இருந்த சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து உணவின்றி உறக்கமின்றி இருந்த தமிழ் மக்கள் இறுதிவரை போராடினர். எப்படியாவது இனப்படுகொலை செய்து போரில் ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக 2009ஆம் ஆண்டு மே மாதம் 16, 17 ஆகிய நாட்களில் சிங்கள பேரினவாதமும் சிங்களப்படைகளும் இதுவரை உலகில் எங்கேயும் நடக்கவே இல்லை என்னுமளவுக்கு முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தை கொன்று புதைத்தன. ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 1 .5லட்சம் ஈழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்டனர் .
முள்ளிவாய்க்கால் என்பது, ஆயுதப் போராட்டத்திற்கான முடிவுரை எழுதப்பட்ட இடம் மாத்திரமல்ல, 1.5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களை சிங்களப்படைகளும் அதன் வெளிநாட்டு ஆதரவு சக்திகளும், உள்ளூர் துணைக்குழுக்களும் அழித்து ஒழித்த நிலம். 12,000க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான குறியீட்டுக் களம். நினைவேந்தலை மாத்திரமல்ல, நீதிக்கான கோரிக்கைகளையும் சேர்த்து வைத்திருக்கின்ற இடம் தான் முள்ளிவாய்க்கால். தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதற்காக சிங்கள பேரினவாத அரசும், விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு சக்திகளும் முன்னெடுத்த கோர யுத்தம், எந்தவித மனிதாபிமான தார்ப்பரியங்களும் போருக்கான அறமும் இன்றி முடித்து வைக்கப்பட்ட இடம் முள்ளிவாய்க்கால்.
இனப்படுகொலை என்பது ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் தன்னியல்பான நடவடிக்கை அல்ல. அது ஓர் ஒடுக்கும் சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது நீண்டகால அளவில் படிப்படியாகச் செயற்படுத்தும் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளின் இறுதி விளைவு. எனவேதான் அது ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என அழைக்கப்படுகின்றது அதாவது, ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவத்தை, அவர்களின் அடையாளத்தை, அரசியல் – பொருளாதார இருப்பை, கடல், நிலம் வாழ் அதிகாரத்தை, உயிர் வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாகவும், பின்பு மொத்தமாகவும் அழிப்பது உட்பட, அனைத்தையும் உள்ளடக்கிய வகையில், ஓர் உடலின் அனைத்து உடற்கூறுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து முழுவடிவம் பெற்றுள்ளது போல, அனைத்தையும் தழுவிய (Holistic) முழுமைப்பட்ட இத்தகைய அழித்தொழிப்பு அணுகுமுறைக்கு ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்ற பதம் எடுத்தாளப்படுகிறது.
இவ்வாறாக மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் பேரினவாத சிங்கள அரசினாலும் சிங்களப் படைகளினாலும் திட்டமிட்டு முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் திகதி தமிழ் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.எந்தளவு கொடூரமாக அப்பாவி மக்கள் மீது போர் ஏவப்பட்டது என்பதற்கு சான்றாதாரங்களாக நினைவேந்தல் நடத்தப்படும் முள்ளிவாய்க்கால் நினைவுத் திடல் பகுதியை அண்மித்த பகுதிகளை சென்று பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.
பேரினவாதத்தின் கோரத் தாண்டவம் இன அழிப்பு என்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியது. 2009இல் அவலக் குரல் ஆகாயத்தை எட்டி முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும் இரத்தக் காடாகியபோதும் அதன் வெறி அடங்காத இனவாத தாண்டவம் இன்றும் தொடர்கிறது. அத்தோடு கடந்த 17 வருடங்களாக தமிழர்கள் சர்வதேசத்தினாலும் இலங்கையின் ஒவ்வொரு ஆட்சியாளர்களாலும் ஏமாற்றப்படுகின்றனர். இனப்படுகொலைக்கான நீதி மறுக்கப்படுகின்றது.இனப்படுகொலையாளர்கள் போற்றப்படுகின்றனர். அது மட்டுமல்ல கடந்த 17 ஆண்டுகளில் தமிழர்களின் நில மீட்புக்கான போராட்டம், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் நீதி தேடலுக்கான போராட்டம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம், நிலஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டம் என்பன வலுவிழக்கச் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த 17 வருடங்களுக்குள் , கடந்த 2009ஆம் ஆண்டுவரை இலங்கையில் எல்லைக்கும் அப்பால் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மேற்குலக அரசியல், பொருளாதார, இராணுவ ஆக்கிரமிப்பு சக்திகள் தமது வரைபடத்திற்குள் முழு இலங்கையை உட்படுத்தியது மட்டுமல்ல, இலங்கையை யார் ஆளவேண்டும் என அவர்களே தீர்மானிக்கும் சக்திகளாகிவிட்டனர்.தமிழர்களை அழித்தொழித்து அவல வாழ்விற்குள் தள்ளி வெற்றி என தேசிய கொடி ஏற்றப்பட்ட 2009 மே 18ஆம் திகதி ஆதிக்க சக்திகளின் வெற்றிக் கொடிகளும் இலங்கையில் சுதந்திரமாக பறக்கத் தொடங்கிவிட்டன. அத்தோடு, தமிழரின் தாயக அரசியல் கோட்பாட்டை வடக்கிற்குள் மட்டும் முடக்கி அழிக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை, தமிழ் மக்களிடம் இருந்து பிரிந்தெடுப்பது என்பது தென் இலங்கைக்கும் அதன் நேச சக்திகளுக்கும் அவசரமாகத் தேவைப்படும் ஒன்று. விடுதலைப் புலிகளை அழித்தால் போதும், தமிழ் மக்களின் போர்க்குணத்தினை முற்றாக முடக்கிவிடலாம் என்று அந்தத் தரப்புக்கள் நம்பின. ஆனால், தமிழ் மக்கள், முள்ளிவாய்க்காலை போர்க்குணத்தின் ஓர்மத்தின் பகுதியாகவே மாற்றியுள்ளார்கள். தாம் பறிகொடுத்த உறவுகளை நினைவுகூர மாத்திரமல்ல அவர்களுக்கான நீதியை நிலைநாட்டவும் முள்ளிவாய்க்காலை ஒரு களமாக மாற்றியுள்ளார்கள்.
இதில் முக்கியமானது தான் முள்ளிவாய்க்கால் கஞ்சி.2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் பேரினவாத அரசின் திட்டமிட்ட உணவுத்தடையாலும், பல மாத காலத் தொடர் யுத்தத்தினாலும் மக்கள் உணவின்றித் தவித்தனர், பலருக்கு ஒரு நேர உணவுகூட கிடைக்காமல் பட்டினி கிடந்தார்கள், குழந்தைகளுக்கான உலர் உணவிற்கு அலைந்தார்கள். பட்டினி சாவுகளும் நிகழத்தொடங்கின. அக்காலகட்டத்திலேயே அந்த மக்களுக்கு கஞ்சியே உயிர்காக்கும் உணவானது.அரிசியும் தவிடும் கலந்து உப்புமிட்டு மக்கள் பசியை ஆற்றினார்கள்.
யுத்தம் முடிவுற்றுப் பல ஆண்டுகள் உருண்டோடிப் போனாலும் யுத்தம் தந்த வடுக்களை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. இந்த யுத்தகால நினைவுகளில் மறக்கமுடியாதவற்றுள் ஒன்றாக விளங்குவது தான் இந்த முள்ளிவாய்க்கால் ”கஞ்சி”.பல இலட்சம் மக்கள் கஞ்சிக்காகக் காத்திருந்து தமது பசிப்பிணி போக்கிய இக் கஞ்சி உணவு அன்றைய நாட்களில் எமது மக்களின் வாழ்வோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்ததாகவே காணப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் உணவுக்காகப் பட்ட அவலத்தையும், கஞ்சி உணவே எமது உறவுகளின் உயிரை தக்க வைத்தது என்பதையும் வெளிப்படுத்தும் முகமாகவும் அவற்றை எதிர்கால சந்ததியினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் தெரியப்படுத்தும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் தமிழர் தாயகமெங்கும் பொது இடங்கள், ஆலயங்களில் மக்களுக்கு கஞ்சி வழங்குவது வழமை . இம்முறையும் முள்ளிவாய்க்கால் ”மே 18” நினைவு வாரத்தை முன்னிட்டு தமிழர் தாயகப்பகுதிகளில் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் பொதுமக்களினாலும் பொது அமைப்புக்களினாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
சிங்கள பேரினவாதமும் சிங்களவர்களுக்கு ஒரு நீதியையும் தமிழருக்கு ஒரு நீதியையும் வழங்கும் நீதித்துறையும் இனவாத பொலிஸ்துறையும் இணைந்து கடந்த 2024 ஆம் ஆண்டுவரை இந்த கஞ்சியைக்கூட பயங்கரவாத செயலாக்கி கஞ்சி வழங்கும் நிகழ்வுகளை இனவாத வெறியோடு தடைசெய்தும் தடுத்தும் வந்தன. ஆண் பெண் வேறுபாடின்றி கைது செய்து சிறைகளிலும் தள்ளின.தற்போது ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தில் சற்று மென்போக்காக நடந்து கொள்வதாக காட்டிக்கொண்டாலும் இவர்களும் ஒரு போதும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி பெற்றுக்கொடுக்கப் போவதில்லை. ஏனெனில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இவர்களும் பங்காளிகள்தான்.