மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்று செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகள் மீதான மரபணுப் பரிசோதனைகள் மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அடையாளம் காணப்படும் என்புத் தொகுதிகளை நிலத்திலிருந்து அகழ்ந்து எடுப்பது என்பது முதற்கட்டத் தனித்துவமான ஒரு செயற்பாடாகும். முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலும் முதற்கட்டமாக என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டன. அதன் பிற்பாடு, அந்த என்பு மாதிரிகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வது என்பது இரண்டாவது நடவடிக்கையாகக் காணப்படுகின்றது.
இந்த இரண்டாவது நடவடிக்கையின் போதே அகழ்ந்து எடுக்கப்பட்ட என்புத் தொகுதிகள் முழுமையாக ஆராயப்பட்டு, அந்த மனிதர்களின் வயது, பாலினம் மற்றும் அவர்களின் இறப்புக்கான துல்லியமான காரணங்கள் கண்டுபிடிக்கப்படும். அத்துடன், அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளினுடைய கால எல்லை பற்றி தொல்லியல் திணைக்களத்தால் அறிவியல் அறிக்கை ஒன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இவை இரண்டும் சமர்ப்பிக்கப்பட்டதன் பிற்பாடு, மூன்றாவது கட்டமாகவே காணாமல்போன உறவுகள் தொடர்பானத் தேடுதல் விவகாரங்கள் ஆரம்பிக்கப்படும். யாராவது தங்களுடைய உறவினர்கள் குறிப்பிட்ட காலத்தில் காணாமல்போனதாகவோ அல்லது கைது செய்யப்பட்டதன் பிற்பாடு இருப்பிடம் தெரியவில்லை என்றோ முறைப்பாடுகளை வழங்கியிருந்தால், தொல்லியல் திணைக்களம் கணித்துள்ள காலப்பகுதியோடு அந்தத் தரவுகளை ஒப்பிட்டு, பாதிக்கப்பட்ட உறவினர்களின் மரபணு மாதிரிகளை ஆய்வு செய்ய வேண்டிய சட்டத் தேவைப்பாடு உள்ளது.
ஏற்கனவே கொக்குத்தொடுவாயிலும் அந்த விடயங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு, தற்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அது தொடர்பாக நீதிமன்றத்திடம் அறிக்கையிடுமாறு கூறப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கை ஒரு சிறந்த முன் உதாரணமாகக் கொண்டுதான், நாட்டில் பதிவாகி வரும் ஏனைய புதைகுழி வழக்குகளின் சட்டப் பிரச்சினைகளும் கையாளப்படும். இதுவே சர்வதேச நியதிகளிலும் பின்பற்றப்படுகின்ற வழக்கமான நடைமுறையாகும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரசாங்க நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணுக்களைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் காப்பகம் எதனையும் இதுவரை உருவாக்கவில்லை.
இனிவரும் காலங்களிலாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணுவைச் சேகரித்துப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாக இருந்தால், அதனைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஒப்புதலோடு மிக இலகுவாக முன்னெடுக்க முடியும். எனினும், இதற்கு அரசினுடைய முழுமையான இராஜதந்திர ஒத்துழைப்பும், தடயவியல் நிபுணர்களுடைய சர்வதேச அளவிலான உதவியும் அவசியமாகக் காணப்படுகின்றது.
மனிதப் புதைகுழி விவகாரத்தில் அடுத்தகட்டமாகச் சட்டப்பூர்வமாக எவற்றினைச் செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றமும், அகழ்வுப் பணிகளில் களத்தில் முன்னிலையாகும் நிபுணர்களுமே தங்களின் அறிவியல் கருத்துக்கள் மூலம் நீதிமன்றத்துக்குத் தெளிவுபடுத்துவார்கள். அதனடிப்படையிலேயே நீதிமன்றம் இறுதித் தீர்மானத்தை எடுக்கும்.” – என்றார்.