கடந்த 02-08-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை பிரம்ரன் மாநகரில் அமைந்துள்ள அழகிய ‘றோஸ் தியேட்டர்’ மண்டபத்தில் நடைபெற்ற அரங்கேற்றச் செல்வி நில்ஷா சகிராஜ் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் பார்வையாளர்களாகவும் சிறப்பு விருந்தினர்களாகவும் உறவினர்கள் நண்பர்களாகவும் கலந்து சிறப்பித்த அனைவரையும் சில மணிநேரத்திற்கு ‘கட்டிப்போடும்’ அளவிற்கு அமைந்தது என்பதே சரியான பார்வையாகும்.
அவரது நடனத் திறமைக்கும் அழகிய நடன உருப்படிகளை தனது சிறிய வயதிலும் கையாண்ட முறை மற்றும் மேடையின் முழுப்பகுதியையும் நேர்த்தியாக பயன்படுத்திய பயிற்சியின் மகத்துவம் மற்றும் நில்ஷாவின் குரு ஶ்ரீமதி நிவேதா ராமலிங்கத்தின் அற்புதமான கற்பித்தல் திறன், நடனங்களை அரங்கேற்றச் செல்விக்காக உருவாக்கிய ஒழுங்கு ஆகியவை அன்றைய அரங்கேற்றத்தை ‘அனைவராலும் ‘பேசப்படும்’ வகையில் மேடையில் சமர்ப்பிக்க உழைத்த அனைவருக்கும் ஒரு வெற்றிகரமான நாள் என்றே குறிப்பிட வேண்டும்.
பரத நாட்டியம் என்னும் ஒரு தெய்வீகக் கலை வடிவத்திற்குள் அடங்கும் ஏராளமான சிறப்பு அம்சங்களில் நிருத்தியம் என்பது அதற்குள் அடங்கும் மூன்று முக்கிய ஆடல் முறைகளில் ஒன்றாகும் என நடன முறைகளை அல்லது அதன் முக்கியத்துவத்தை உலகிற்கு தந்த விற்பன்னர்கள் பதிவு செய்த ஒரு அங்கமாகும். இது பரதநாட்டியத்தை மற்றவர்களுக்காக சமர்ப்பிக்கும் ஒரு நடனத்தாரகை அன்று பாடப்பெறும் பாடல்களின் பொருளுக்கும் இசைக்கும் ஏற்ப முகபாவனைகள், கை முத்திரைகள் மற்றும் உடல் அசைவுகள் மூலம் கருத்துகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு வெளிப்படையான நடன இலக்கணமே ‘நிருத்தியம்’ என்று அழைக்கப்பெறுகின்றவகையில் அன்றைய தினம் செல்வி நில்ஷா சகிராஜ் தனது நூறுவீத ஆற்றலை வெளிப்படுத்தி தனது குருவிற்கும் தனது பெற்றோர் மற்றும் அரங்கேற்றத்திற்காக உழைத்த அனைவருக்கும் நற்பெயரை பெற்றுக் கொடுத்துள்ளார் என்றே கூறவேண்டும்.
அன்றைய அரங்கேற்றத்தின் பிரதம விருந்தினராக இந்தியாவிலிருந்து வந்து கலந்து கொண்ட பிரதம விருந்தினர் ருக்மினி அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகிய பரதநாட்டிய உலகில் நன்கு அறியப்பெற்ற நடன மணிகளாகவும் விமர்சனம் செய்யும் வித்தகர்களாகவும் உள்ளவர்களின் உரைகளில் நில்ஷாவினது அவரது குருவினதும் ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பான விடயங்கள் பகிரப்பட்டபோது சபையோர் கரகோசம் செய்து பாராட்டிய நேரத்தில் சபையோர் முழுமையான மகிழ்ச்சியை அனுபவித்தார்கள் என்பதும் நில்ஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெருமிதம் கொண்டிருப்பார்கள் என்பதே உண்மை.
அங்கு சிறப்புரையாற்றிய கனடா உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களும் தனது சில நிமிடங்களாற்றிய உரையில் நில்ஷாவின் தந்தை வழி தாய் வழி உறவுகளின் சிறப்புக்களையும் குரு நிவேதா அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க நடனப் பயணம் தொடர்பாகவும் எடுத்துரைத்தார். அன்றைய பக்கவாத்தியக் கலைஞர்களில் பலர் கனடிய மண்ணில் நன்கு அறியப்பெற்றவர்களாகத் தொடர்பவர்களாக உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவை மிருதங்கக் கலைஞரும் அறிவிப்பாளருமாக பிரசாந்த் தொகுத்து வழங்கினார்.
சத்தியன் பார்வையில்..