மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு
Share
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
09.10.2024
மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை யை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச ரீதியாக சாதனை நிகழ்த்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை 9ம் திகதி அன்றைய தினம் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் S.சந்தியாகு(FSC) தலைமையில் இடம்பெற்றது.
இவ்வருடம் சீனாவில் இடம்பெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சர்வதேச ரீதியில் வெண்கலப் பதக்கம் வென்ற குயின்ரன் ராஜகுமார் கோசல்யன், மலேசியாவில் இடம் பெற்ற UCMAS விரைவு கணித போட்டியில் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களான சிரோன்,செஷான் அதே நேரம் புது டெல்லியில் 40 கழகங்களுடன் இடம் பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் இலங்கை 17 வயது உதைபந்தாட்ட அணி சார்பாக கலந்து கொண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்தோணி தாஸன், கிதுசான், ஆகியோர் மேற்படி நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர்.
அதே நேரம் 2023 (2024) ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை யை சேர்ந்த 10 மாணவர்களும் பாடசாலை சமூகத்தினரால் இன்றைய தினம் (9) கெளரவிக்கப்பட்டனர்.
மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து சாதனை வீரர்கள் மாலை அணிவிக்கப்பட்டு Band வாத்திய இசை இசைக்கப்பட்டு ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டு வெற்றி கிண்ணங்கள் சான்றிதழ்கள்,பணப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப் பட்டனர்.
குறித்த கெளரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி. G. D. தேவராஜ், சாதனை மாணவர்களின் பெற்றோர்கள், வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள்,மாவட்ட செயலக விளையாட்டு அதிகாரி , பழைய மாணவர்கள், ஆசிரியர்கள்,உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்,
சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கான பண பரிசில்களை மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.