பாடசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருவதால் மதுரையில் பதற்றம் நிலவுகிறது
Share
மதுரையில் இதுவரை 10 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர்கள் பதற்றத்துடனே இருக்க வேண்டிய உள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி மதுரையில் நான்கு பாடசாலைகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலமாக மிரட்டல் வந்தது. தொடர்ந்து அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று மதுரை சின்னசொக்கிகுளம், காளவாசல், பெரியார்பேருந்து நிலையம் மற்றும் பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள 4 நட்சத்திர தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயிலில் மிரட்டல் வந்தது. கடந்த திங்கட்கிழமை மதுரை பேச்சிகுளம் பகுதியில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. செவ்வாய்கிழமை மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் உயர்நிலை பாடசாலை, அரபிந்தோ மீரா பாட்சாலை உள்ளிட்ட 3 பாடசாலைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று மதுரை மாவட்டத்தில் 5-வது முறையாக கருப்பாயூரணி அருகே வீரபாஞ்சான் டிவிஎஸ் லட்சுமி ஸ்கூல், மகாத்மா குளோபல் ஆகிய 2 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மின் அஞ்சல் மூலமாக மிரட்டல் வந்தது. அதிர்ச்சியடைந்த பாடசாலை நிர்வாகங்கள், உடனடியாக குழந்தைகளை வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி, வளாகத்தில் அமர வைத்தனர். பெற்றோர்களுக்கு புலனம் மற்றும் தொலைபேசி மூலம் குழந்தைகளை அழைத்து செல்லுமாறு தகவல் தெரிவித்தனர். பதற்றமடைந்த பெற்றோர்கள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, கார்களில் விரைந்து சென்று குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஏராளமானோர் பெற்றோர், தனியார், அரசு அலுவலகங்களில் பணிபுரிகின்றனர். பலரின் தந்தை வெளியூர்கள் சென்றுவிட்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை உடனடியாக அழைக்க செல்ல முடியாமல் பரிதவித்தனர்.
தொலைபேசியில் பள்ளிகளை தொடர்பு கொண்டு விசாரித்தாலும், சரியான தகவல் கிடைக்காததால் பதற்றமடைந்தனர். அதன்பிறகு உறவினர்களை அனுப்பி குழந்தைகளை அழைத்து வந்தனர். போலீஸார் வழக்கம்போல் சோதனை செய்தபோது, வெறும் புரளி என்பது தெரியவந்தது. கடந்த 10 நாட்களாக மதுரை பள்ளிகளையும், அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களையும் வெடிகுண்டு மிரட்டல்களால் பதற்றத்தில் வைத்துள்ள குற்றவாளிகளை போலீஸார் தற்போது வரை நெருங்க முடியவில்லை. அவர்கள் எங்கிருந்து மிரட்டல் விடுக்கின்றனர் என்பதை கூட அறிய முடியவில்லை. இதுபோன்ற மிரட்டல்கள் வெறும் புரளி என்று பெற்றோர்கள், பள்ளி நிர்வாகங்களால் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. திடீரென்று விபரீத சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள், குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு வீட்டில், அலுவலகத்தில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. வழக்கமான குற்றவழக்குகளை போல் போலீஸார், மந்தமாக விசாரிக்காமல், தேவையான இணைய தொழில் நுட்ப வல்லுநர்களை அழைத்து ஆலோசனை பெற்று குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும், பள்ளிகளில் பொய்யான மிரட்டல்கள் வரும்போதும், யாரும் பயப்பட வேண்டாம் என்று போலீஸாரும், பள்ளிகளும் அறிவிப்பை வெளியிட்டாலும் பெற்றோரிடன் பதற்றத்தை குறைக்க முடியவில்லை. மின்னஞ்சலை யார் அனுப்பினார்கள் என்பதைக் கூட தற்போது வரை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஜிமெயில், அவுட்லுக் மூலம் இந்த மிரட்டல்கள் வந்திருந்தால் உடனடியாக அதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடித்து விட முடியும் என்றும், ஆனால், வெளிநாடுகளில் மட்டுமே உள்ள நிறுவனங்களின் மெயில்களில் இருந்து இந்த மிரட்டல்கள் வருவதால் அதை அனுப்பியவர்களை போலீஸார் உடனடியாக கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள்.