LOADING

Type to search

இந்திய அரசியல்

காஷ்மீரில் ஓமர் அப்துல்லாவுக்கு ஆம்ஆத்மி ஆதரவால் காங்கிரஸ் பழிதீர்க்கப்படுகிறது

Share

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தான் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓமர் அப்துல்லா பங்கு கொடுக்க வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில் தான் தற்போது ஆம்ஆத்மி கட்சி காஷ்மீரில் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவை வழங்கி காங்கிரஸ் கட்சியை பழிதீர்த்துள்ளார். அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம். ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் கடந்த 8 ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. அப்போது எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி என்பது கிடைக்கவில்லை.

அதாவது முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து இருந்தது. இதில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் ஜெயித்தது. இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியானது.

அதேபோல் பாஜக 29 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜேபிசி கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன்மூலம் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படுவது உறுதியானது. அதுமட்டுமின்றி தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஜம்மு காஷ்மீரில் அமையும். அதில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படுவார்கள். அதுமட்டுமின்றி அதிக இடங்களில் ஜெயித்தாலும் கூட மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அதிகாரத்தில் இடம்பெறும். காங்கிரஸ் கட்சியினருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான் தற்போது பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது ஆட்சியை பிடிக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் தான் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சிக்கு 42 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் நேற்று 4 சுயேச்சைகள் அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர். இதனால் காங்கிரஸ் ஆதரவு இன்றியே தேசிய மாநாட்டு கட்சிக்கு ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிப்பதற்கான 46 எம்எல்ஏக்களின் ஆதரவு என்பது கிடைத்து விட்டது. இதனால் காங்கிரஸ் இன்றி தேசிய மாநாட்டு கட்சியால் ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க முடியும். இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக தான் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அதாவது இந்த தேர்தலில் ஒரு இடத்தில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. தோதா தொகுதியில் ஆம்ஆத்மி வேட்பாளராக மேக்ராஜ் மாலிக் போட்டியிட்ட நிலையில் அவர் பாஜக வேட்பாளர் கஜய் சிங் ரானாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தான் தற்போது ஆம்ஆத்மி எம்எல்ஏ மேக்ராஜ் மாலிக் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் இதற்கான கடிதத்தை ஆம்ஆத்மி எம்எல்ஏ மேக்ராஜ் மாலிக் வழங்கி உள்ளார்.

இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சிக்கான ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்பது காங்கிரஸை தவிர்த்து 47 ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி தனித்து ஆட்சியை அமைக்கலாம். அதாவது தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் கூட அமைச்சரவையில் திமுகவினர் மட்டுமே உள்ளனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியினரை கழற்றிவிட்டுவிட்டு அமைச்சரவையில் தனது கட்சியினரை மட்டுமே நியமிக்க ஓமர் அப்துல்லா முடிவு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஆம்ஆத்மியின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஹரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநில தேர்தல்களில் ஆம்ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டியது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் கட்சி பலமாக உள்ளது எனக்கூறி ஆம்ஆத்மியை கூட்டணியில் சேர்க்கவில்லை. இதனால் ஆம்ஆத்மி கட்சி தனித்தே போட்டியிட்டது. அப்படித்தான் காஷ்மீரில் தனித்து களமிறங்கிய ஆம்ஆத்மி ஒரு எம்எல்ஏவை பெற்றது. தற்போது அவர் மூலம் ஆம்ஆத்மி கட்சியானது ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை தூரம் வைக்க கட்டம் கட்டி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் இப்படி அடுத்தடுத்து தங்களுக்கு எதிராக நிகழும் நிகழ்வுகள் காங்கிரஸை ரொம்பவே கதிகலங்க வைத்துள்ளது.