LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழக் வெற்றிக் கழக் மாநாட்டுக்காக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை விஜய் நியமித்தார்

Share

தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொகுதி வாரியாக தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து அரசியல் பிரவேசம் கண்டுள்ள விஜய், கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார். நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இந்த மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வு கடந்த 4 ஆம் தேதி அதிகாலையில் நடைபெற்றது. கட்சியின் கொள்கைகள், அடுத்த கட்ட திட்டம் உள்ளிட்டவற்றை மாநாட்டில் வெளியிடுவதாக விஜய் அறிவித்துள்ளார். மாநாட்டு பணிகளை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் ஒருங்கிணைத்து வருகிறார். இந்நிலையில், தவெக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் 2 பெண்கள், 5 ஆண்கள் என 7 பேர் தற்காலிகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மாநாட்டிற்கு வருபவர்களை அழைத்து வந்து அழைத்து செல்லவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களை செய்து கொடுக்கவும் இந்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. தற்போதைக்கு இவர்களுக்கு தற்காலிகமாக பொறுப்பு வழங்கப்பட்டிருந்தாலும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இவர்களே பொறுப்பாளர்களாக நீடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழக மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்க 27 குழுக்களை அக்கட்சி அமைத்துள்ளது. அதன்படி, பொருளாதாரக் குழு, சட்ட நிபுணர்கள் குழு, வரவேற்புக் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரக்குழுவில் 56 பேரும், மாநாட்டிற்கான போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் குழுவில் 104 பேரும் இடம்பெற்றுள்ளனர். இவற்றுடன், தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.மேலும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வானிலை பகிர்வுக்குழு, அவசர உதவிக்குழு, சமூக ஊடக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.