”சங்கு” கள்வர்களும் ”வீட்டு” திருடர்களும்
Share
”தமிழர் தேசம், சமஷ்டி,சுயாட்சி,அதிகார பரவலாக்கம்,தைப்பொங்கலுக்குள் தீர்வு, தீபாவளிக்குள் தீர்வு,13ஐ அமுல்படுத்தல்,அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணிகள் விடுவிப்பு ,காணாமல் போனோர் கண்டுபிடிப்பு.போர்க் குற்றவாளிகள் தண்டிப்பு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை என தமிழ் மக்களின் நாடி , நரம்புகளில் எல்லாம் உசுப்பேற்றி பிரசாரம் செய்து வாக்குகளைக் கொள்ளையடித்த இந்த ”புலித்தோல் போர்த்திய நரிகள்” தற்போது ”சங்குக் கள்வர்கள் ”,”வீட்டுத் திருடர்கள்”. ”பார்க்காரர்கள் ”,”மாம்பழத் திருடர்கள்”எனக் கோஷமிட்டுக் கொண்டு மிகவும் அசிங்கமான ”சேறடிக்கும்”அரசியல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்”
கே.பாலா
ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களையும் பிளவுபட்டு நின்று ஆதரித்து ”நவக்கிரகங்கள்”போல் செயற்பட்டு ”எம்மை அந்த ஆண்டவினாலும் ஒற்றுமைப்படுத்த முடியாது”என்பதை சிங்கள தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் அம்பலப்படுத்தி தமிழ் தேசிய இனத்தை தலைகுனிய வைத்த ”தமிழ் தேசியக்கட்சிகள்” என்ற ”புலித்தோல் போர்த்திய நரிகள்” எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலிலும் கட்சிகளாகவும் சுயேட்சைக் குழுக்களாகவும் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் சேற்றை அள்ளி வாரியிறைத்து தமிழர் அரசியலை ”நாற்றம்”எடுக்க வைத்து வருகின்றனர்.
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு மாகாணத்திலுள்ள யாழ் -கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தொகுதியில் 23 அரசியல்கட்சிகள், 21 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 6 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 396 வேட்பாளர்களும் வவுனியா ,முல்லைத்தீவு ,மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிமாவட்ட தேர்தல் தொகுதியில் 24 கட்சிகள்,27 சுயேச்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 6 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 423 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.இதற்கமைய வடக்கு மாகாணத்திலுள்ள 12 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 819 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
இதே போன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 22 கட்சிகளினதும் 27 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 5 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 392 வேட்பாளர்களும் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 14 கட்சிகளினதும் 17சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 4 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 217 வேட்பாளர்களும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் (அம்பாறை மாவட்டம்)20 கட்சிகளினதும் 44 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 7 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்இதற்கமைய கிழக்கு மாகாணத்திலுள்ள 16 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 1249 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதற்கமைய வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள 28 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 2068 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால்தான் தமது பாராளுமன்ற ஆசனத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்திலும் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகாது விட்டால் அரசியலில் காணாமல் போய் விடுவோம் என்ற கலக்கத்திலுமே இதுவரை தமிழ் தேசியம் பேசியவர்கள் எல்லாம் அதனைத் தூக்கி தூர வீசிவிட்டு தமிழ் தேசியத்தை நாறடிக்கும் அரசியலை கையில் எடுத்துள்ளனர்.
கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் ”தமிழர் தேசம், சமஷ்டி,சுயாட்சி,அதிகார பரவலாக்கம்,தைப்பொங்கலுக்குள் தீர்வு, தீபாவளிக்குள் தீர்வு,13ஐ அமுல்படுத்தல்,அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணிகள் விடுவிப்பு ,காணாமல் போனோர் கண்டுபிடிப்பு.போர்க்குற்றவாளிகள் தண்டிப்பு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை என தமிழ் மக்களின் நாடி , நரம்புகளில் எல்லாம் உசுப்பேற்றி பிரசாரம் செய்து வாக்குகளைக் கொள்ளையடித்த இந்த ”புலித்தோல் போர்த்திய நரிகள்” தற்போது அந்த புலித் தோலைக் கழற்றிவிட்டு அம்மணமாக நின்று ”சங்குக் கள்வர்கள் ”,”வீட்டுத் திருடர்கள்”. ”பார்க்காரர்கள் ”,”மாம்பழத் திருடர்கள்”எனக் கோஷமிட்டுக் கொண்டு மிகவும் அசிங்கமான அரசியல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .
எந்தவொரு தமிழினத் துரோக வேலைகளுக்கும் ஆரம்ப புள்ளியிடுவது இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனின் தலையாய பணி என்பதனால் அவர் தான் தற்போதைய பாராளுமன்றத் தேர்தல் பிரசாரக் களத்திலும் ”சங்குக் கள்வர்கள் ”, ”பார்க்காரர்கள்” ,”மாம்பழத் திருடர்கள்”கோஷத்தை பிரதான பிரசாரமாக்கி தமிழ் தேசிய இனத்தையும் தமிழ் தேசிய அரசியலையும் நாற்றமெடுக்க வைத்து ஏனைய சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் தமிழ் சமூகத்தை மிகவும் கீழ்த்தரமாக ,இழிவாக ,அருவருப்பாக பார்க்கும் ,பேசும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுக் கட்டமைப்பினாலும் தமிழ் சிவில் சமூகத்தினாலும் தமிழ் பொது வேட்பாளர் களமிறக்க எடுக்கப்பட்ட முடிவை முந்திரிக்கொட்டைபோல் முந்திக்கொண்டு யாழ்ப்பாணத்தில் கூட்டம் நடத்தி ”பொதுவேட்பாளரை தோற்கடித்தே தீருவேன்”என சபதமிட்டு தமிழர் அரசியலை மலினப்படுத்தி சந்தி சிரிக்க வைத்தது போலவே தற்போதைய பாராளுமன்றத் தேர்தலிலும் தனது முதல் பிரசாரக் கூட்டத்திலேயே அருவருப்பான அரசியலை முன்னெடுத்து வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ”நாற்றமடிக்கும்”அரசியல் கலாசாரத்தை சுமந்திரனே ஆரம்பித்து வைத்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றபொது அதில் உரையாற்றிய சுமந்திரன், ”ஜனாதிபதித் தேர்தலோடு ஓர் ஆபத்து வந்திருக்கின்றது. பல தடவைகள் நாங்கள் அபாயச் சங்கை ஊதினோம். அது கைமீறிவிட்டது. பொதுவான ”சங்கு’ சின்னத்தையும் திருடி விட்டார்கள். சின்னத்தைத் திருடியவர்கள் அதற்கு முன்னர் எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைத் திருடினார்கள். திருடுவது என்பது அவர்களுடைய வாழ்க்கை வழிமுறையாகவே இருந்திருக்கின்றது.ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சேர்த்து வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் திருந்தவில்லை. கட்சிப் பெயரைத் திருடினார்கள்.மக்களுக்குப் பொய்யான நம்பிக்கையை ஊட்டி ”சங்கு”சின்னத்தையும் திருடி விட்டார்கள்.
கடந்த மாதம் 23ஆம் திகதி நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கு முன்னர் ”சங்கு” சின்னத்தைத் தாம் பயன்படுத்த மாட்டோம் என்று ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தங்களின் கையெழுத்தின் பெறுமதி தெரியவில்லை. சின்னத்தைத் திருட மாட்டோம் என்று கையெழுத்திட்டவர்கள் ஒரு சில மணித்தியாலங்களுக்கு உள்ளேயே குத்துவிளக்கைக் கைவிட்டு சங்கைத் தருமாறு தேர்தல் திணைக்களத்துக்குக் கடிதம் கொடுத்தார்கள். இவ்வாறான சங்கு கள்ளருக்கு இம்முறை மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். மாம்பழத் திருடர்களுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
எங்கள் கட்சியிலிருந்து வெளியேறிய ஒருவர் அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலை உரிமம் கொடுத்தேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார்.ஊழலுக்கு எதிரான அரசு என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய இந்த அரசு இரண்டு விடயங்களில் தடுக்கி விழுந்து கொண்டிருக்கின்றது. ஒன்று ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான செலவீனங்களைத் தேர்தல் திணைக்களத்துக்கு இதுவரை கொடுக்கவில்லை. மற்றையது மதுபான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றவர்களின் பெயர் விவரங்களை மூன்று நாட்களுக்குள் வெளிப்படுத்துவோம் எனக் கூறினார்கள். மூன்று வாரமாகிவிட்டது, இன்னும் வெளிப்படுத்தவில்லை.நான் பகிரங்கமாக அரசுக்குச் சவால் விடுகின்றேன் மதுபான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றவர்களின் விபரங்களை வெளிப்படுத்துங்கள்”என்று பேசியுள்ளார்.
2001ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரு பொதுக் குடையின் கீழ் போட்டியிடுவதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு 2001 அக்டோபரில் விடுதலைப் புலிகளின் பின்னணியுடன் உருவாக்கப்பட்டது. இதில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈ.பி.ஆர்.எல்.எ ப்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டே உருவாக்கப்பட்டது. பின்னாளில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகமும் (புளொட் ) இதில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
2001 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 15 ஆசனங்களையும் 2004 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 22 ஆசனங்களையும் 2010 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 14 ஆசனங்களையும் 2015 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 16 ஆசனங்களையும் 2020 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 10 ஆசனங்களையும் கைப்பற்றியது.
சுமந்திரன் 2010 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.2015 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில்ல் போட்டியிட்ட சுமந்திரன் 58,043 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவான நிலையில் பின்னர் அவரின் சுயரூபம் வெளிப்படத் தொடங்கியதால் 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 27,834 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றார். இம்முறையும் எப்பாடுபட்டேனும்,என்ன விலைகொடுத்தேனும் யாரைப் பலி கொடுத்தேனும் பாராளுமன்றம் சென்றுவிட வேண்டும் என்பதில் கொலை வெறியுடன் சுமந்திரன் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் 2010 ஆம் ஆண்டு ”வெளிநாட்டு மாப்பிள்ளை ”போல் வந்த சுமந்திரன் 14 ஆண்டுகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் குடும்பம் நடத்திவிட்டு தற்போது மனைவி நடத்தை கெட்டவள் .பிள்ளைகள் தறுதலைகள் என்று கூறுவது போல் ”கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சேர்த்து வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் திருந்தவில்லை”என்று கூறுகின்றார். அதேபோல் ”மதம் மாற்றிகள்,சிங்களவரின் மாமனார், சிங்களவரின் மருமகன் ,சிங்களவரின் சம்பந்திகள் , சிங்களவர்களுடன் வர்த்தக உறவுகளை வைத்திருப்பவர்கள், சிங்கள பெண்ணின் காதலர், பேரினவாதத்தின் விசுவாசிகள் திருந்துவார்கள் என்று நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சேர்த்து வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் திருந்தவில்லை ”என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிகள் சொல்வதற்கு எவ்வளவு நேரமாகும் ?
ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் .புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரையே மறைமுகமாக ”சங்குக் கள்வர்கள் ”என சுமந்திரன் கூறியதால்தான் ”வீட்டு திருடன்”என சுமந்திரனை சித்தார்த்தன் கூறுகின்றார்.எனவே நாம் ஒருவரை குற்றம்சாட்டி ஒருவிரலை நீட்டும்போது ஏனைய 3 விரல்கள் எம்மை நோக்கியே நீண்டிருக்கும் என்பதனை முதலில் சுமந்திரன் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ”உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் (யோவான் 8:7) என்று இயேசு கிறிஸ்து கூறியது சுமந்திரனுக்கும் நன்கு பொருந்தும்.
ஆகவே பாராளுமன்றத் தேர்தலில் ஒரே அணியில் இருந்தவர்கள் எதிரும் புதிருமாக போட்டியிடுவது தவறில்லை. உங்கள் தேர்தல் பிரசாரங்களை தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுப்போம் என்பதை போட்டி போட்டு கூறுங்கள்.மக்களுக்கு போட்டி போட்டு நம்பிக்கையளியுங்கள்,அவர்களை வாக்களிக்கத் தூண்டுங்கள்.உங்கள் எதிரணியினரை விட நீங்கள் மக்களின் அவலங்களை , தேவைகளை, பிரச்சினைகளை அதிகம் தெரிந்து கொண்டவராக காட்டுங்கள் அதன் மூலம் வெற்றிபெறுங்கள், அதனை விடுத்து இழிவான,அருவருப்பான ,3ஆம்தர பிரசாரங்களை மேற்கொண்டு தமிழர் தேசிய அரசியலை தரம் தாழ்த்தி மற்றைய இனங்கள் முன்பாக தமிழ் மக்களை கூனிக்குறுகி நிற்க வைத்து விடாதீர்கள்.