இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; இம்மாத இறுதியில் கொழும்பில் பேச்சு
Share
நடராசா லோகதயாளன்
*இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் புதியமுயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய இருநாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுக்களுக்கிடையில் எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பில் விசேட பேச்சு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கரின் இலங்கை விஜயத்தின்போது இந்த பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக, தென்னிந்திய மீனவர்கள் இழுவைப்படகுகள் மூலம் இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடிப்பதால், இலங்கை மீனவர்கள் பெரும்பாதிப்புகளை எதிர்கொள்கின்றமை தொடர்பில் அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.
அதற்கமைய இந்த விவகாரம் இரு தரப்புக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளதாகவும், இம்மாதம் 29 ஆம் திகதி இலங்கை, இந்திய கடற்றொழில் அமைச்சுக்களுக்கு இடையில் 6 ஆவது தடவையாக பேச்சுகளை முன்னெடுத்து அதன் ஊடாக இருதரப்பு இணக்கப்பாட்டுடன் பொதுதீர்வொன்றை எட்டுவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இதுதொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் முக்கிய உயரதிகாரியொருவரிடம் வினவியபோது. 29ஆம் திகதி இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இரு நாட்டு கடற்றொழில் அமைச்சுக்களுக்கிடையிலான பேச்சுக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கூட்டுசெயற்குழு கூட்டத்தின்போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவிடமிருந்து பதில் கிடைத்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி எம்மால் கலந்துகொள்ள முடியுமா எனக் கேட்கப்பட்டிருந்தது. எம்மால் பங்கேற்க முடியும் என்று பதிலளித்திருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் பேச்சில் பங்கேற்கவுள்ள தூதுக்குழுவின்பட்டியலைக் கோரியிருந்தபோதிலும் அது இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
கொழும்பில் கடற்றொழில் அமைச்சால் இந்த பேச்சைநெறிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியத் தூதுக்குழுபட்டியல் கிடைக்கப்பெற்றவுடன் அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும். பதிலளித்தார்.