காற்று மாசால் திணறும் டில்லி
Share
டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
டில்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. மத்திய காற்று மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தரவின்படி, டில்லியில் இன்று காற்றின் தரக்குறியீடு 307 ஆக பதிவாகியுள்ளது. ‘மிகவும் மோசமான’ காற்று மாசுபாடு நிலையில் பதிவாகியுள்ளது. மேலும் அதிகாலை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, உடல்நல அபாயங்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு பிரச்னை உள்ளவர்கள் இந்த காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியின் மோசமான காசு மாசுபாட்டிற்கு, அண்டை மாநிலங்களில் பயிர் கழிவு எரிப்பு, தடையை மீறி பட்டாசு வெடிப்பது போன்றவை காரணமாக பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் ஹரியானாவில் 19.8 சதவிகிதமும், பஞ்சாபில் 28.7 சதவிகிதம் பயிர் கழிவு எரிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. மோசமான காற்றின் தரம் காரணமாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு அனைத்து வகையான பட்டாசுகள் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை முழுமையான தடையை ஏற்கனவே விதித்துள்ளது. ஆனால் பல்வேறு பண்டிகைகள் காரணமாக தடையை மீறி மக்கள் பட்டாசு வெடிப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் காற்று மாசும் அதிகரித்து வருகிறது. தீபாவளிக்கு பிறகு, மாசு அளவு இன்னும் அதிகரிக்கும். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.