LOADING

Type to search

இலங்கை அரசியல்

கேப்பாப்புலவு காணிகளை விடுவித்து தருமாறு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை

Share

நடராசா லோகதயாளன்

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு 24-10-2024 அன்றையதினம் காலை கேப்பாப்பிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளினை மீட்டுத் தருமாறு தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றினை சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் (Ecdo), கேப்பாபிலவு கிராமமக்கள் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் மகஜரினை ஒப்படைத்துள்ளனர்.

மகஜரினை பெற்ற அரச அதிபர் எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு ஆளுனர் வருகை தரவுள்ளதாகவும் இவ் விடயம் தொடர்பில் நேரில் கதைப்பதாகவும் குறித்த மக்களிடம் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள் , பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பல போராட்டங்கள் செய்தும் இதுவரை தீர்வு இல்லை என்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கேப்பாப்புலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் இன்னும் மக்களின் குடியிருப்புக்கள் காணிகள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதேவேளை கடந்த 21.9.2024அன்றையதினம் வடமாகாண ஆளுனர் நா.வேதநாயகன் அவர்களை குறித்த மக்கள் நேரில் சந்தித்து காணி விடுவிப்பு தொடர்பாக மகஜர் ஒன்றினை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.