”பாஜக விஜய்யை வைத்து கட்சி தொடங்கியுள்ளது” – சபாநாயகர் அப்பாவு பேட்டி!
Share
நடிகர் ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைக்க பாஜக முயற்சி செய்ததாகவும், ஆனால் அவர் வராததால், அதற்கு பதிலாக விஜய்யை ஆரம்பிக்க வைத்துள்ளதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் பிசான சாகுபடிகளை மேற்கொள்ளும் வகையில், பாபநாசம் காரையார் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் 155 நாட்களுக்கு விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில், பாபநாசம் அணையில் இருந்து தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழக வெற்றிக் கழகத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரோடு நானும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன். ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பற்றி நிறைய விஷயங்கள் வருகிறது. பாஜக தலைவர்களுடன் புஸ்ஸி ஆனந்த் நெருக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் தகவல் வருகிறது. அப்படி பாஜகவோடு நெருக்கமாக இருக்கும் புஸ்ஸி ஆனந்தை, எப்படி கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திமுக பணம் சம்பாதிப்பதாக விஜய் சொல்லி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும் போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம். புஸ்ஸி ஆனந்த் கிரிமினல் என விஜய்யின் தந்தையே சொல்லி இருக்கிறார். ஒருவேளை கிரிமினல் தற்போது நல்ல ஆளாக மாறிவிட்டாரா? என்று தெரியவில்லை. நடிகர் விஜய் வருமான வரி சோதனையில் சிக்கிய போது, குற்றவாளியை போல் வருமான வரித்துறையினர் காரில் அழைத்துச் சென்றனர். நடிகர் ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைக்க பாஜக முயற்சி செய்தது. அவர் வரவில்லை. அதற்கு பதிலாக விஜய்யை ஆரம்பிக்க வைத்துள்ளனர் என செய்திகள் வருகிறது” இவ்வாறு தெரிவித்தார்.