LOADING

Type to search

இலங்கை அரசியல்

தென்னிலங்கைவாசிகள் நாட்டிய விஷச்செடி தமிழ் தேசிய கூட்டமைப்பை சீர்குலைத்து விட்டது – சுரேந்திரன் ஆதங்கம்!

Share

பு.கஜிந்தன்

எமது ஒற்றுமையை குலைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நாட்டப்பட்ட விஷச் செடிகள் தற்போது விருட்சமாகி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைத்து விட்டது என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் மூளாயில் நடைபெற்ற தேர்தால் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தென் இலங்கையிலே பல தரப்பான வேட்பாளர்கள் பிரிந்து நின்று தேர்தலை எதிர்கொள்வது வழக்கம். ஆனால் தமிழர்கள் மாத்திரம் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஜனநாயக பரப்பிலும், ஆயுதப் போராட்டத்திற்கு பின்னர் ஆயுதப் போராட்ட அமைப்புகள் அனைவரும் ஜனநாயகத்துக்கு திரும்பிய பின்னரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் தேர்தலில் களமிறங்கினார்கள்.

அதற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்று இணைந்து 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பிரசவித்து, ஒரு பலமான தேசிய கட்டமைப்பாக தமிழர்கள் திகழ்ந்து வந்ததை தென்னிலங்கை மிகவும் விருப்போடும், அவதானத்தோடும் உற்று நோக்கியது.

எங்களுக்குள்ளே பல்வேறு விதமான காட்சிகள் பிரிந்து நிற்கின்ற பொழுது தமிழர்கள் மாத்திரம் எப்படி ஒரே ஒரு கட்சியோடு ஒருமித்த நிலையிலே பயணிக்கிறார்கள் என்பதை அவர்கள் விசனத்தோடு கண்ணுற்றார்கள். இதற்கு நாங்கள் என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள். இந்த ஒற்றுமையை எவ்வாறு சீரழிக்கலாம் என சிந்தித்தார்கள்.

அதன் விளைவாக 2010ஆம் ஆண்டு காலப்பகுதியிலே சில விஷச் செடிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நட்டார்கள். தேசியம் என்ற பேரிலே அந்த செடிகள் கொடி விட்டு படர்ந்து விருட்சமாக வளர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்டங்கட்டமாக சின்னா பின்னப்படுத்த ஆரம்பித்தது.

தென் இலங்கையின் நிகழ்ச்சி நிழலை நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதான கட்சியாக இருந்த தமிழரசு கட்சியிலே இருந்து கொண்டு முடிவுகளை எடுக்கின்ற பொழுது அதனுடைய அங்கத்துவ காட்சிகளாக இருந்து, தமிழ் மக்களுக்காக ஆயுதமேந்தி தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த அமைப்புக்கள் இடம் கொடுக்க மறுத்தார்கள்.

தமிழரசு கட்சியானது தென் இலங்கையில் இருக்கின்ற காட்சிகளோடு ஒரு தீர்மானத்தை எடுத்துக்கொண்டு அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே புகுத்துவதற்காக அழுத்தம் கொடுக்கின்ற வேளையிலே இந்த காட்சிகள் மறுத்துரைத்தார்கள். எதிர்த்தார்கள்.

ஆகவே இவர்களுடன் தொடர்ந்து பயணிப்பது தங்களுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கோ, அல்லது தென்னிலங்கையில் இருக்கின்றவர்களை சந்தோசப்படுத்துவது தமிழரசுக் கட்சிக்கு சிரமமாக இருந்தது.

தென் இலங்கையில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப அதன் இலக்குகளை நிறைவேற்றுவதற்கு கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலே, எல்லோரும் சேர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்த வீட்ட சின்னத்தை திருடிக் கொண்டு, நாங்கள் தனித்து தேர்தலில் களம் இறங்கப் போகின்றோம் எனக் கூறிக்கொண்டு பிரிந்து சென்றார்கள்.

ஆனாலும் நாங்கள் தமது மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஒற்றுமையை சீர்குலைக்க கூடாது என்ற வகையிலே அனைத்து தமிழ் தரப்புகளையும் பொது அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஜனநாயக தமிழ் தேசிய என்று வரையறுக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட, சீராக ஒழுங்கமைப்பப்பட்ட ஒரு கட்டமைப்பின் கீழ் பயணிக்க ஆரம்பித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.