LOADING

Type to search

இந்திய அரசியல்

“எம்.ஜி.ஆரை விஜய் புகழ்ந்து பேசியது தவறில்லை” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Share

ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என முன் உதாரணமாக வாழ்ந்து காட்டிய எம்.ஜி.ஆரை தவெக தலைவர் விஜய் புகழ்ந்து பேசியது தவறில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கத்தின் தொழிலாளர் 167 பேருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “சென்னையில் மாநகராட்சிகளில் இருக்கும் பூங்காக்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மாநகராட்சியில் உள்ள விளையாட்டு மைதானங்களை தனியாரிடம் ஒப்படைத்தால், அங்கு கட்டணம் வசூலிக்கப்படும் சூழல் ஏற்படும். அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் அந்த விளையாட்டு மைதானங்களை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். எனவே, இந்த திட்டத்தை அரசு கைவிட்ட வேண்டும். திமுக ஆட்சியில் தொடர்ந்து கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி அதிக அளவு காலியாக உள்ளது . மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதால், உடனடியாக இந்த அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தமிழ்நாடு அரசு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள டான்டீ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடும் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கவும், குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கைகளை, செயல்திட்டங்களை விளக்கியிருக்கிறார். அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார். அது சரியா, தவறா என்று நாம் சொல்ல முடியாது.

அதிமுகவை பொருத்தவரை எங்கள் தலைவர்கள் வகுத்த கொள்கைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படுகிறோம். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது. கொள்கை என்பது நிலையானது. நிலையான கொள்கை உடைய கட்சி அதிமுக. திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே மறைமுக கூட்டணி உள்ளது. இதனை தற்போது மற்ற கட்சிகளும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதிமுக சிறப்பாக செயல்படுவதால் எங்களைப் பற்றி விஜய் விமர்சிக்கவில்லை. அதிமுக வாக்குகளை எந்த சூழலிலும் விஜயால் ஈர்க்க முடியாது. எம்.ஜி.ஆரை விஜய் புகழ்ந்து பேசியது தவறில்லை. எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்ற சூழல் நிலவுகிறது. ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என முன் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர். இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.