LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஊசிக்கு விழுமா வாக்கு? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

கனடாவில் வசிக்கும் ஒரு செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார், “கடந்த வாரக் கட்டுரையில் மருத்துவர் அர்ஜுனாவை ஒரு பலூன் என்று சித்திரித்திருந்தீர்கள். ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அவருக்கு அதிகரித்த ஆதரவு உண்டு போலத் தெரிகிறது. இப்போது வடக்கில் காணப்படும் சுயேச்சைகளில் அவருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கலாம் என்றும் தோன்றுகின்றதுஎன்று.

மற்றொரு நண்பர்,அவரும் புலம்பெயர்ந்தவர் கூறினார்,”இது சமூகவலைத்தளங்களின் காலம். யூடியூப்பர்கள் நீங்கள் கூறுவது போல எது சரியானது என்று தேடுவதை விடவும், எதைப் பிரசுரித்தால் தங்களுக்கு வருமானம் அதிகம் கிடைக்கும் என்று தேடுகிறார்கள்.இது அர்ஜுனா போன்றவர்களுக்கு சாதகமானதுஎன்று.

நாடாளுமன்ற தேர்தலில் தாயகத்தில் களமிறங்கியிருக்கும் சுயேச்சைகளில் மிகக் குறுகிய காலத்துக்குள் மிகப் பரவலாகப் பிரபல்யம் அடைந்த ஒருவர் அர்ஜுனாதான். குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அதிலும் நடுத்தர வயதுப் பெண்கள் மத்தியில் அவருக்கு ரசிகைகள் அதிகம் என்று அவதானிக்கப்பட்டுள்ளது.புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் நாட்டில் உள்ள தமது உறவினர்களுக்கு தொலைபேசியில் அழைத்து அர்ஜுனாவை ஆதரிக்குமாறு தூண்டி வருகிறார்கள். அந்தளவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அர்ஜுனாவுக்கு கவர்ச்சி அதிகம்.

அவருடைய மீசையில்லாத முகம்,முகபாவம்,நேரலையில் அவர் கதைக்கும் விதம்.எளிமையாக, இயல்பாகப் பேசும் ஆற்றல், எப்பொழுதும் நேரலையில் நிற்பது.. போன்றவை அவருடைய பிரதான கவர்ச்சிகள். ஆனால் அண்மை நாட்களாக வெளிவரும் காணொளிகளை வைத்துப் பார்த்தால் அவர் தன் வாயாலேயே  கெடப் போகிறாரா என்ற சந்தேகம் அதிகரிக்கின்றது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் யூ டியுப்கள் போன்றன நிபுணத்துவ அறிவை வெளியே தள்ளுகின்றன என்ற விமர்சனம் ஏற்கனவே உண்டு. சமூக வலைத்தளங்களின் காலம் எனப்படுவது சாதாரணமானவர்களின் காலம்தான்.சமூக ஊடகங்கள் சாதாரண மானவர்களுக்குமேடை அமைத்துக் கொடுக்கின்றன. இதனால் அவை பொது உளவியலை அதிகம் பிரதிபலிக்கின்றன. ஆனால் பொது உளவியல் எப்பொழுதும் சரியாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. அது புத்திசாலித்தனமாக அல்லது நீதியானதாக இருக்க வேண்டும் என்றும் இல்லை.அது மாயைகளின் பின் போக முடியும். பொது உளவியல் பெரும்பாலும் மந்தை மனோநிலையைக் கொண்டது என்ற ஒரு விமர்சனம் உண்டு. அது அறிவுபூர்வமாக விவகாரங்களை அணுகுவதில்லை என்ற விமர்சனமும் உண்டு. சமூக வலைத்தளங்களும் யூரியூப்களும்  பொதுப் புத்தியை வருமான நோக்கு நிலையில் இருந்து அணுகும் பொழுதும் கையாளும் பொழுதும் அங்கே எது பரபரப்பானதோ, சர்ச்சைக்குரியதோ, எது சாதாரண ஜனங்களை சுண்டி இழுக்கின்றதோ அதுதான் செய்தியாகின்றது; காணொளியாகிறது.

குறிப்பாக தமிழில் அறிவுபூர்வமான விஞ்ஞானபூர்வமான விடயங்களை எடுத்து அலசும்  யூரியூப்களை விடவும் பரபரப்பான சூடான செய்திகளைப் பரப்பும் யூரியூப்கள்தான் அதிகம் பார்க்கப்படுகின்றன. இது தமிழுக்கு மட்டுமான சாபக்கேடு அல்ல.ஒரு உலகப் பொது யதார்த்தம் என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.இதனால் சாதாரண மக்களைச் சுண்டியிழுக்கும் விவகாரங்களும் நபர்களும் அதிகம் பிரபல்யமாகின்றார்கள். அர்ஜுனாவும் அப்படித்தான்.

மருத்துவத்துறை மீது அர்ஜுனா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் பல ஏற்கனவே சாதாரண மக்கள் மத்தியில் உள்ளவைதான். அர்ஜுனா சாதாரண மக்களின் குரலாக மேலெழுந்தார். அதுதான் அவருக்கு இருந்த கவர்ச்சி. இப்பொழுதும் அந்த கவர்ச்சி உண்டு. அவருடைய முகநூல் பக்கத்தில் அவரை பின்தொடர்புகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக அதிகரித்துள்ளது. அந்த பின் தொடரிகளில் அனைவரும் அவருடைய அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பார்களாக இருந்தால் பெரும்பாலும் அவருக்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் கிடைக்க வேண்டும். கிடைக்குமா?

இப்பொழுது அரங்கில் காணப்படும் தமிழ் சுயேச்சைகளில் அதிகம் பிரபல்யமான ஒருவர் அவர்தான். ஏனைய பெரும்பாலான வேட்பாளர்களோடு ஒப்பிடுகையில் ஏற்கனவே பிரபல்யமாக உள்ள அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக சாதாரண மக்களுக்கு அதிகம் தெரியவந்த ஒருவராக அர்ஜுனா காணப்படுகிறார். இது அவருக்கு வாக்குகளைத் திரட்ட உதவக்கூடும்.

அதாவது பொழிவாகச் சொன்னால் ஒரு வேட்பாளரின் பிரபல்ய த்தின் அளவுதான் அவருக்கு விழும் வாக்குகளின் அளவும் என்று எடுத்துக் கொண்டால் ,அர்ஜுனாவுக்கு அதிகம் வாக்குகள் விழ வாய்ப்புகள் உண்டு. அப்படி விழுமா?

அர்ஜூனா மட்டுமல்ல, ஏனைய எல்லா வேட்பாளர்களுமே டிஜிட்டல் ப்ரோமோஷன் என்று கூறிக் காசைத் தாராளமாக அள்ளி வீசுகிறார்கள். தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் அவர்களுடைய சிறிய மற்றும் பெரிய விளம்பரங்கள் வெளிவருகின்றன. குறிப்பாக ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று பாடல்களைத் தயாரிக்கிறார்கள். அல்லது ஏற்கனவே உள்ள பாடல்களின் சில வரிகளைத் தெரிவு செய்கிறார்கள். ஒவ்வொரு வேட்பாளரும் தன்னை ஒரு சினிமாத்தனமான கதாநாயகனாக அல்லது கதாநாயகியாகக் கட்டி எழுப்புவதற்காக பாடல்களின் பின்னணியில் காட்சி தருகிறார்கள்.

பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநகரங்களைக் கொண்ட தென்னிலங்கையிலும் மேற்கத்திய நாடுகளிலும் விளம்பர நிறுவனங்கள் உண்டு. அங்கு விளம்பரம் ஒரு கலையாகவும் வியாபாரமாகவும் திட்டமிட்டு புத்திபூர்வமாக, விஞ்ஞானபூர்வமாக வடிவமைக்கப்படுகின்றது. அதற்குரிய செலவும் அதிகம். தென்னிலங்கையில் பிரதான வேட்பாளர்கள் தமது சுவரொட்டிகள் தொடக்கம் டிஜிட்டல் விளம்பரங்கள் வரை எல்லாவற்றிற்கும் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட விளம்பர நிறுவனங்களிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றார்கள். அதற்கு வேண்டிய நிதியும் அவர்களிடம் உண்டு. ஆனால் தமிழர் தாயகப் பகுதியில் அவ்வாறு வளர்ச்சி பெற்ற விளம்பர நிறுவனங்கள் இல்லை. அதைவிட முக்கியமாக, விளம்பரத்தை அல்லது டிஜிட்டல் ப்ரமோசனை ஒரு கலையாகக் கருதி அதை அதற்குரிய கலைப் பெறுமானங்களோடும் வணிகப் பெறுமானங்களோடும் கையாளும் நிறுவனங்கள் கிடையாது.

இத்தகையது ஒரு பின்னணிக்குள்,தமிழ் வேட்பாளர்கள் பலருடைய சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், டிஜிட்டல் விளம்பரங்கள் போன்றவற்றில் கலைப் பெறுமதியைக் காண முடியவில்லை. அவற்றில் அரசியல் வாடைதான் அதிகம்.

இப்படிப்பட்டதோர் பிரச்சார, விளம்பரச் சூழலில் அர்ஜுனாவும் உட்பட எல்லா வேட்பாளர்களும் அவரவர் தங்களுடைய நிதிக் கொள்ளளவுக்கு ஏற்ப பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

இதில் அர்ஜுனா ஒரு இடத்தில் தெளிவாக வேறுபடுகிறார்.ஏனைய பெரும்பாலான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சார விளம்பரங்களில் பெருமளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலைத்தான் உரையாடுகிறார்கள். ஆனால் அர்ஜுனா மருத்துவத்துறைக்கு எதிராக முன்னெடுத்த கலகத்தின் மூலம் கட்டி எழுப்பிய பிம்பத்தைத்தான் பிரச்சாரப்படுத்தி விளம்பரப்படுத்தி வருகிறார். இந்த வேறுபாடும் அவருக்கு அதிகரித்த வாக்குகளைத் திரட்டிக் கொடுக்குமா ?

தமிழ் தேர்தல் வரலாற்றில் அர்ஜுனாவை போன்ற ஒரு சுயேச்சை குழு ஒரு விதத்தில் புதிய அனுபவம் தான். அது தமிழ் தேர்தல் வரலாற்றில் ஒரு வித்தியாசம். ஆனால் தனக்குக கிடைத்த பிரபல்யத்தை அதுவும் குறுகிய காலத்தில் கிடைத்த பிரபல்யத்தை தேர்தலில் முதலீடு செய்ய முற்படும் விடயத்தைப் பொறுத்தவரை, அவர் ஏனைய சராசரி தமிழ் வேட்பாளர்களை போல ஒருவர்தான்.

தனக்கு கிடைத்த பிரபல்யத்தை அதுவும் மிகக் குறுகிய காலத்தில் கிடைத்த பிரபல்யத்தை எப்படி வாக்குகளாக மாற்றலாம் என்று அவர் சிந்திக்கின்றார். அதை நோக்கியே உழைக்கின்றார்.

அந்த பிரபல்யம் அவருக்கு வாக்குகளாக மாறுமா? இல்லையா? என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அவர் சிறை வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவரை மீட்பதற்காக யாரும் தெருவில் இறங்கவில்லை. சாவகச்சேரியில் அவர் தனது கலகத்தைத் தொடங்கிய பொழுது நூற்றுக்கணக்கான மக்கள் அவருக்காக வீதியில் திரண்டார்கள். ஆனால் அதே கலகத்தின் தொடர்ச்சியாக அவர் சிறை வைக்கப்பட்ட பொழுது யாரும் அவருக்காகத் தெருவில் இறங்கவில்லை. அப்படித்தான் வாக்களிப்பின் போதும் அவருடைய அபிமானிகளும் பின்தொடரிகளும் அவரைக் கைவிடுவார்களா அல்லது? வெற்றி பெற வைப்பார்களா? அல்லது அவர் தன்னுடைய வாயாலேயே தோற்றுப் போவாரா