இலங்கை அரசியலிலிருந்து ஒதுங்கிய ”பெரும் தலைகள்”
Share
”அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பலரும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியுள்ளமை இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடுவதற்காகவா? அந்தளவுக்கு எமது அரசியல்வாதிகள் சிந்திக்கக் கூடியவர்களா? ,விட்டுக்கொடுக்கக் கூடியவர்களா?, நல்லவர்களா? அல்லது மக்கள் செல்வாக்கை இழந்து விட்டனரா? அல்லது மக்களின் ”மறதி”யை பயன்படுத்தி மீண்டும் பாய்வதற்காக 5 வருடங்களுக்கு பதுங்குகின்றனரா?”
கே.பாலா
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களுக்காக 8352 வேட்பாளர்கள் களமிறங்கி முட்டி மோதிவரும் நிலையில் இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் வாக்களிப்பு மூலம் தெரிவான 196 எம்.பி.க்கள் ,தேசியப்பட்டியல் மூலம் தெரிவான 29 எம்.பி.க்கள் உள்ளிட்ட 225 எம்.பி.க்களில் 58 எம்.பி.க்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டுள்ளமை ஏன் என்ற பெரும் கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் வாக்களிப்பு மூலமான 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 7452 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில் அந்த வேட்பாளர் எண்ணிக்கை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் 936 வேட்பாளர்களினால் அதிகரித்துள்ளதுடன் இம்முறை போட்டியிடும் சுயேச்சைக் குழுக்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது.
அதாவது எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும் 8352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களிலும் மொத்தமாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் சார்பாக 764 குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அவற்றில் 74 குழுக்களின் வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டதால் 690 குழுக்கள் தேர்தல் களத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பாராளுமன்றத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 196 ஆசனங்களை வெற்றி கொள்வதற்காக இடம்பெறவுள்ள இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இது நாட்டிலுள்ள 2052 வாக்காளர்களுக்கு ஒரு வேட்பாளர் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
மேலும் 29 தேசியப்பட்டியல் பாராளுமன்ற ஆசனங்களுக்காக 469 உறுப்பினர்களை அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் முன்மொழிந்துள்ளன. இது ஒரு ஆசனத்துக்கு 16 தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் என்ற போட்டியை உருவாக்கியுள்ளது.இவ்வாறு கடும் போட்டிகளுக்கு மத்தியில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளதால் பிரசாரங்கள், வாக்குறுதிகள், சேறடிப்புகள்,இன ,மதவாதங்கள், பொய் ,பித்தலாட்டங்கள் என தேர்தல் களம் அதிர்ந்து கொண்டிருக்கின்றது.
எப்பாடுபட்டேனும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகிவிட வேண்டுமென்ற கனவில்,பேராசையில்,கொள்கையில்,பணத்திற்காக, வாக்குகளை சிதறடிப்பதற்காகவென பல நோக்கங்களில் பலர் புதிதாக அரசியல் களம் புகுந்துள்ள நிலையில் மறுபுறம் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சர்களாக இராஜாங்க அமைச்சர்களாக ,அமைச்சர்களாக பிரதமராக,ஜனாதிபதியாக இருந்து அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பலரும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியுள்ளமை நல்லெண்ணமா ,சகுனித்தனமா,பதுங்கலா அல்லது மீண்டும் பாய்வதற்கான தற்காலிக ஓய்வா என பல சந்தேகங்கள் மக்களிடம் ஏற்பட்டுள்ளன. ஏனெனில் தேர்தலில் போட்டியிடாமைக்கான சரியான , தெளிவான காரணங்களை இவர்களில் பலரும் வெளியிடவில்லை.
இவ்வாறு போட்டியிடாது ஒதுங்கியவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அரசியலில்,அதிகாரத்தில் கோலோச்சியவர்கள்.அதாவது இந்த 58 எம்.பி.க்களில் பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரி பால சிறிசேன, முன்னாள் பிரதமரும் மக்கள் ஐக்கிய முன்னணித் தலைவருமான தினேஷ் குணவர்தன, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான நீதியரசர் .விக்னேஸ்வரன்,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவரான முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ,ஐக்கிய குடியரசு முன்னணித் தலைவரான முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ,முன்னாள் சபாநாயகர்களான சமல் ராஜபக்ச,மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட பிரபலமானவர்கள் பலர் இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடவும் இல்லை. இவர்களில் தினேஷ் குணவர்தனவைத் தவிர்ந்த வேறு எவரினது பெயர்கள் தேசியப்பட்டியலில் இடம்பெறவுமில்லை.
நடைபெறவுள்ள தேர்தலில் ராஜபக்ச குடும்பத்திலிருந்து சமல் ராஜபக்சவின் மகனான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச போட்டியிடும் நிலையில் மஹிந்த ராஜபக்சவின் மகனான முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளார்.ஏனையவர்களான மஹிந்த ராஜபக்ச,சமல் ராஜபக்ச,பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச என எந்தவொரு ராஜபக்ஸக்களும் இம்முறை போட்டியிடாது ஒதுங்கியுள்ளமைதான் பெரும் பேசு பொருளாகியுள்ளது. ராஜபக்ஸக்கள் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டனரா அல்லது பயந்து விட்டனரா அல்லது மீண்டும் பாய்வதற்காக 5 வருடங்களுக்கு பதுங்குகின்றனரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அதேவேளை இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதவர்களில் கடந்த பாராளுமன்றத்தில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நீதியரசர் விக்னேஸ்வரன்,சார்ள்ஸ் நிர்மலநாதன் ,வினோநோகராத லிங்கம் ஆகிய தமிழர்களும் அலிசப்ரி ,நஸீர் அஹமட்,பௌசி ,முஹமட் முஸம்மில்,ஹரிஸ் ஆகிய முஸ்லிம்களும் ஏனையோர் சிங்களவர்களுமாவர் . இவர்களில் விக்னேஸ்வரன், வாசுதேவ நாணயக்கார, ஜோன் செனவிரத்ன போன்றவர்கள் வயது மூப்பின் காரணமாக இவ்வாறான முடிவை எடுத்திருந்தாலும் ஏனையவர்கள் ஏன் ஒதுங்கியுள்ளனர் என்ற கேள்விகளும் உண்டு.
2022 மார்ச் இறுதியில் வெடித்த ”அரகலய’மக்கள் புரட்சியில் ”ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்ற முக்கிய கோஷம் முன்வைக்கப்பட்ட நிலையிலும் இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் பெண்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படும் தற்போதைய நிலையிலும் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாகவிருந்த பலர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்ப்பது போராட்டக்காரர்களின் கோஷத்துக்கு மதிப்பளித்தா அல்லது இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடுவதற்காகவா? அரசியலில் ஆண்ட பரம்பரையான ராஜபக்ச சகோதரர்களில் ஒருவர் கூட நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதுள்ளமை ”ராஜபக்ச குடும்ப ஆட்சி”இனி இலங்கை அரசியலில் இல்லை என்று கருத முடியுமா?
இவ்வாறு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது விலகியவர்களில் சிலர் நாம் இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிட வேண்டும் அவர்களுக்கு பின்னால் நின்று அவர்களை வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறுவதனை நம்ப முடியுமா?அந்தளவுக்கு எமது அரசியல்வாதிகள் சிந்திக்கக் கூடியவர்களா? ,விட்டுக்கொடுக்கக் கூடியவர்களா ,அந்தளவுக்கு நல்லவர்களா? அல்லது சிறந்த நடிகர்களா ,நரித்தனமான சிந்தனை கொண்டவர்களா?
இதில் இவர்கள் எந்த வகையினர் என்பதனை அறிந்து கொள்ள மருத்துவத்துறையில் பயிலும் பயிற்சி மருத்துவர்களுக்கு மூத்த மருத்துவர்கள் வழங்கும் அறிவுரை ஒன்றே போதுமானது . இது மருத்துவர்களுக்கு மட்டுமன்றி அனைத்து துறையினருக்கும் பொருந்தக்கூடியது.அதாவது ”ஒரு சத்திர சிகிச்சையை செய்து முடிப்பவர் நல்ல மருத்துவர்.ஒரு சத்திர சிகிச்சையை எப்போது செய்ய வேண்டுமெனத் தெரிந்தவர் சிறந்த மருத்துவர்.ஒரு சத்திர சிகிச்சையை எப்போது செய்யக்கூடாது என்பதை தெரிந்தவரே அதி சிறந்த மருத்துவர்”என்பதே அந்த மூத்த மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில் செய்யக்கூடாத நேரத்தில் சத்திரசிகிச்சையை செய்தால் ”சத்திரசிகிச்சை வெற்றி நோயாளி மரணம்” நிலை ஏற்பட்டு விடும்.
அந்தவகையில் தான் தற்போது எதிர்வரும் நவம்பர் 14 ஆம்திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியுள்ள இந்த 58 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெருமளவானோர் ”ஒரு சத்திர சிகிச்சையை எப்போது செய்யக்கூடாது என்பதை தெரிந்த அதி சிறந்த மருத்துவர்” போன்றவர்களேயாவர்.இந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலரும் தற்போதைய பாராளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட்டால் தமது முடிவு என்ன என்பதை நன்றாகவே அறிந்தவர்கள்.அதனால்தான் கௌரவமாக ஒதுங்கி தங்கள் அதி சிறந்த அரசியல்வாதிகள் என்பதனைக் காட்டியுள்ளனர்.
எனவே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற இவர்களின் முடிவு நிரந்தரமானதல்ல. தற்காலிகமானது.அதிலும் அரசியலையே தமது மூச்சாக வைத்துள்ள ராஜபக்ஸக்கள் ஒருபோதுமே அரசியலிலிருந்து முற்றாக ஒதுங்கும் இவ்வாறான நிரந்தர முடிவை எடுக்க மாட்டார்கள். அவர்கள் இலங்கையின் அரசியலுக்கமைய தம்மை மாற்றிக்கொண்டவர்கள் அல்ல. தமக்கு ஏற்றாற்போல் இலங்கை அரசியலை மாற்றிக்கொண்டவர்கள். ராஜபக்ஸ குடும்பத்தின் மீது நாட்டு மக்களுக்கு தற்போதுள்ள கோபம், விரக்தி ,வெறுப்பு ,பகையை நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனும் ராஜபக்ஸ பரம்பரையின் முக்கிய விழுதுமான நாமல் ராஜபக்சவுக்கு கிடைத்த வாக்குகள் மூலம் உணர்ந்து கொண்டதாலும் பாராளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்ஸக்களின் தோல்வி உறுதி என்பதனை தெரிந்த கொண்டதாலுமே ராஜபக்சக்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி மீண்டும் ஒரு பாய்ச்சலுக்காக அடுத்த பாராளுமன்றத்தேர்தல் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.
மக்களிடமிருந்து பிரியாததும் பிரிக்க முடியாததும் ”மறதி ”என்பது இலங்கை அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும். அதனால்தான் குற்றவாளிகளும், ஊழல்வாதிகளும் ,மோசடிப் பேர் வழிகளும்,பாதாளக் குழுத் தலைவர்களும் மீண்டும் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிக் கொண்டிருக்கின்றனர்.எனவே தற்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியுள்ள இவர்கள் தமது அசிங்கப் பக்கங்களை மக்கள் மறப்பதற்காக அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரையிலான 5 வருட காலத்தை தியாகம் செய்துள்ளனர் அதாவது மக்களின் மறதிக்காக இவர்கள் காத்திருக்கின்றனர்.அதன்பின்னர் மீண்டும் உத்தமர்களாக அரசியல் களம் புகுவார்கள்.பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரிப்பார்கள்.அதுவரைக்கும் இவர்கள் தற்காலிக ஓய்வில் இருக்கப் போகின்றார்கள்.