மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சிங்கப்பூர் பயணம்
Share
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அரசு முறை சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்படி முதலில் ஆஸ்ரிரேலியாவிற்கு செல்லும் அவர், அங்குள்ள பிரிஸ்பேன் நகரில், ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டுள்ள 4-வது இந்திய தூதரகத்தை திறந்து வைக்க உள்ளார். பின்னர் கான்பெர்ரா நகரில் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங்குடன் இணைந்து, 15-வது வெளியுறவு அமைச்சர்களின் கட்டமைப்பு உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் உரையாற்ற உள்ளார். அதோடு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், தொழில்துறையினர், ஊடக அமைப்பினர் மற்றும் அந்நாட்டு மந்திரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார். இதன் பிறகு 8-ந்தேதி சிங்கப்பூர் செல்லும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு நடைபெறும் 8-வது ஆசியான் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். பின்னர் அந்நாட்டின் அரசியல் தலைவர்களை சந்தித்து, இந்தியா-சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.