தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம்?
Share
தமிழகம் முழுவதும் மாநிலம் வாரியாக த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். கூட்டணி ஆட்சி, அதிகாரப்பகிர்வு என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலை முன்னெடுத்துள்ள விஜய் கூட்டணிக்கான வாசலை திறந்து வைத்துள்ளார். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிகளில் உள்ள கட்சிகளை இழுக்கவும், எந்த கூட்டணியிலும் இல்லாத கட்சிகளை வரவழைக்கவும் தற்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார்.
எந்தவொரு கட்சிக்கும் கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது. விரைவில் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார். ஏற்கனவே மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்தார். அந்த அணிகளில் இடம் பெற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகளை விஜய் வழங்க இருக்கிறார். அதன்படி மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார். மக்கள் சந்திப்புக்காக விஜய்க்கு சிறப்பு வசதிகளுடன் வாகனம் தயாராகி வருகிறது. இதன்படி கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என மண்டல வாரியாக பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளை அடுத்த மாதம் பனையூர் தலைமை அலுவலகத்தில் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கி, நெல்லையில் முடிக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.