சுமந்திரனின் ”அமைச்சர்”கனவு பலிக்குமா அல்லது பகல் கனவாகுமா?
Share
”நாம் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது, ஒரு நிலையான தீர்வு கிடைக்கும் வரை மத்திய அரசில் நாம் பங்குபெறக் கூடாது என்ற கருத்துக்கள் நிலவின. ஆனால், அது கட்சியின் கொள்கை அல்ல . ஏனென்றால் தமிழரசுக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை எடுத்த ஒரு காலகட்டம் உள்ளது . என் சொந்த நிலைப்பாடு செல்லையா குமார சூரியரைப் போலவோ ,லக்ஸ்மன் கதிர்காமரைப் போலவோ, டக்ளஸ் தேவானந்தாவைப் போலவோ தனி ஒரு அமைச்சராக அமைச்சரவையில் போய் சேருவதென்பது மக்களுக்கு நன்மை பயக்காது.ஆனால், முருகேசு திருச்செல்வம் கட்சி சார்பாக – கட்சியின் தீர்மானமாக அமைச்சரானார் . அது வித்தியாசமான ஒரு விடயம் ”எனக் கூறி தமிழரசுக்கட்சியும் அமைச்சுப்பதவி ஏற்கலாம் என சுமந்திரன் நியாயம் கற்பிக்கின்றார்
கே.பாலா
2010ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பி.யாக தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்து படிப்படியாக தமிழர் உரிமைகளை, உரிமைக் கோஷங்களை வலுவிழக்கச்செய்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பையும் பிளவுபட வைத்து தற்போது தமிழ் மக்களின் தாய்கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியையும் அழித்து ”ஒட்டகம் புகுந்த வீடாக”உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான எம்.ஏ. சுமந்திரன் இன்று தனது கனவான அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள ,பொறுப்பேற்கத் தன்னை தயார்படுத்தத் தொடங்கி விட்டதாகவே தெரிகின்றது.
பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில ,’’இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு, அந்தக் கட்சியின் உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை வெளிவிவகார அமைச்சராக ஏற்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இவ்வாறாக சுமந்திரன் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வது எமக்கு பிரச்சினை அல்ல. ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்காக முன்வைத்துள்ள இரண்டு நிபந்தனைகளே பிரச்சினையாக இருக்கின்றன. அதாவது இலங்கையை சமஷ்டி அரசாக அறிவிக்கும் அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கின்றது. அதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது.
இதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான 30/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தாலும், அந்த தீர்மானத்தை மீண்டும் ஏற்றுக்கொண்டு செயற்படுத்த இவர்கள் இணங்கியுள்ளனர். இந்த தீர்மானத்தை செயற்படுத்தி பிரிவினைவாதிகளை மகிழ்விக்க இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் 2015இல் புலனாய்வுத் துறை வீழ்ச்சிடைய இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளே காரணமாகும். இதனால் அந்த நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க தமிழரசுக் கட்சியிடம் நிபந்தனையின்றி இணங்கியுள்ளனர் ‘’என்ற தகவலை பகிரங்கமாகவே வெளியிட்டார்.
உதய கம்மன்பிலவின் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அநுர தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என சுமந்திரனும் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.முன்னைய காலத்தில் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது, ஒரு நிலையான தீர்வு வருகின்ற வரைக்கும் மத்திய அரசில் நாங்கள் பங்குபெறக் கூடாது என்கின்ற கருத்துக்கள் நிலவின. ஆனால், அது கட்சியினுடைய கொள்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை எடுத்த ஒரு காலகட்டமும் இருந்திருக்கிறது.
ஆகவே, அப்படியான ஒரு சூழ்நிலை வருகின்ற போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அந்த நேரத்தில் தான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்.எனினும் என்னுடைய சொந்த நிலைப்பாடு செல்லையா குமார சூரியரைப் போலவோ அல்லது லக்ஸ்மன் கதிர்காமரைப் போலவோ அல்லது டக்ளஸ் தேவானந்தாவைப் போலவோ தனி ஒரு அமைச்சராக அமைச்சரவையில் போய் சேருவதென்பது மக்களுக்கு நன்மை பயக்காது.ஆனால், முருகேசு திருச்செல்வம் போல் கட்சி சார்பாக – கட்சியினுடைய தீர்மானமாக மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு அமைச்சரவையில் சேர்ந்தார்.ஆனால், அமைச்சராக இருந்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனத் தெரிந்த உடனேயே கட்சியின் கட்டளைப்படி அரைவாசிக் காலத்திலேயே அமைச்சுப் பதவியை அவர் பதவிவிலகல் செய்து வெளியே வந்தார். அது வித்தியாசமான ஒரு விடயம் என்று கூறி அமைச்சர் பதவி ஏற்பதற்கான தனது விருப்பை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதற்கான தயார்படுத்தலை சுமந்திரன் நேற்றோ இன்றோ முன்னெடுக்கவில்லை. கடந்த 14 வருடங்களுக்கும் மேலாகவே நீறு பூத்த நெருப்பாக அவர் மேற்கொண்டு வந்த தயார்படுத்தல்கள், காய் நகர்த்தல்கள் ,ஆடுபுலி ஆட்டங்களுக்கு ஆட்சியில் இருந்த அரசுகள் பொருந்தி வராத நிலையிலும் அந்த அரசுகளில் அமைச்சுபதவியை பொறுப்பேற்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என்பதாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பிளவுபடுத்தி தமிழரசுக்கட்சியை அழிக்கும் ஒப்பந்தம் நிறைவேறாததாலுமே இதுவரை ஆசையை அடக்கி வைத்திருந்த சுமந்திரன் தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பினதும் இலங்கை தமிழரசு க்கட்சியினதும் அழிவின் இறுதிக் கட்டத்திலும் மக்கள் வேண்டிய ஆட்சிமாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ள நிலையிலுமே தனது அமைச்சுப் பதவி ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
இரா.சம்பந்தனின் தூரநோக்கற்ற சிந்தனையின் விளைவாக 2010 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் மூலம் தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்த சுமந்திரன், தமிழ் தேசியக்கூட்டமைப்பு,இலங்கை தமிழரசுக்கட்சி என்பவை இருந்தால் தனது அமைச்சுப் பதவிக் கனவு நனவாகாது என்பதனாலேயே முதலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற மரத்தை அடியோடு வெட்டாமல் அதன் கிளைகளை ஒவ்வொன்றாக வெட்டி வீழ்த்த ஆரம்பித்தார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அப்போதைய தலைவரான இரா.சம்பந்தனின் நம்பிக்கைக்குரியவராகவும் சம்பந்தனின் அடுத்த நிலைக்குரியவராகவும் சம்பந்தனின் தீர்மானங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவராகவும் இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கட்சியினருக்கு பாராளுமன்றத் தேர்தலில் வேட்புமனுக்கள் கொடுக்க மறுத்து இரா.சம்பந்தன் தரப்பால் செய்யப்பட்ட அநீதியினால் சம்பந்தனுடன் முரண்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது அணியுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய நேரத்தில் சுமந்திரன் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்குள் நுழைந்தமை சுமந்திரனின் ஆதிக்கத்துக்கு வாய்ப்பாக அமைந்தது
அதேபோன்றே சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு அவர் பாராளுமன்றத்தேர்தலில் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டு தேசியப்பட்டியல் ஆசனமும் மறுக்கப்பட்டு பாராளுமன்ற அரசியலில் இருந்து வெளியேற வைக்கப் பட்டார். இவ்வாறு சுமந்திரனுக்கு சவாலாக தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்தவர்கள் திட்டமிட்டு அகற்றப்பட்ட பின்னர் சம்பந்தனின் வலதுகரமாக மாறிய சுமந்திரன் சம்பந்தனின்,உடல் நிலையைப் பயன்படுத்தி தனது முடிவுகளையும் அறிவிப்புக்களையும் சம்பந்தனின் முடிவுகளாக, அறிவிப்புக்களாக வெளியிட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
இதன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் சுமந்திரனால் ஏற்பட்ட,ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகள், குழப்பங்கள், குத்து வெட்டுக்கள்,குழிபறிப்புக்களினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ ,சித்தார்த்தன் தலைமையிலான புளொட் ஆகிய பங்காளிக் கட்சிகளும் வெளியேறின.வெளியேற்றப்பட்டன.அதனுடன் மட்டும் நின்றுவிடாது தன்னை அரசியலுக்கு அறிமுப்படுத்தி அரசியல் முகவரி கொடுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் மீதே வளர்த்த கடா மார்ப்பில் பாய்ந்த கதையாக பாய்ந்த சுமந்திரன் செயலற்ற தலைவராக இருக்கும் சம்பந்தன், எம்.பி.பதவியிலிருந்து விலக வேண்டுமென போர்க்கொடி தூக்கினார்.சம்பந்தன் சுமந்திரனின் சுயரூபத்தைக்கண்டு கொண்டு பதவி விலக மறுத்தாலும் தமிழரசுக்கட்சி அழிவதை சம்பந்தன் பார்த்து கண்ணீர் வடிக்கக்கூடாது என்று நினைத்தோ என்னவோ இயற்கை சம்பந்தனை அழைத்துக் கொண்டது.
இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சுமந்திரனின் திட்டம் வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து அடுத்த ஆட்டமாக தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றி பேரினவாத ஆட்சியாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் ஆட்சியில் பங்கேற்று பயணிப்பது அல்லது தமிழரசுக்கட்சியையும் அழித்து விட்டு தமிழர் தேசிய அரசியலை முன்னெடுக்க எந்தவொரு பலமான கட்சியும் இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டு பதவியேற்கும் அரசுடன் பயணிப்பது என்ற திட்டத்தை செயற்படுத்தத் தொடங்கினார்.
சுமந்திரனின் முதல் திட்டத்துக்கு சிறீதரன் தமிழ் தேசியம் என்ற கொள்கையுடன் பெரும் தடைக்கல்லாக அமைந்து தமிழரசுக்கட்சியின் தலைமையை ஜனநாயக முறைப்படி கைப்பற்றி சுமந்திரனை ஆட்டம் காண வைத்ததால் தனது அடுத்த ஆட்டத்தை தொடங்கிய சுமந்திரன் கட்சிக்குள் தன்னால் உள்வாங்கப்பட்டு ஜால்ரா அடிக்கப் பழக்கப்படுத்தப்பட்ட விசுவாசிகளை பயன்படுத்தி நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்து சிறீதரனை தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவியை ஏற்க விடாது இடைக்காலத் தடை உத்தரவுகளைப் பெற்று கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முடக்கினார்.
இதற்கிடையில் ஜனாதிபதித்தேர்தல் வந்த நிலையில் அப்போது ஜனாதிபதியாகவிருந்த ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற மாட்டார் என்பதனை கணித்த சுமந்திரன்,தமிழரசுக்கட்சியின் ஆதரவை வழங்க அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியுடனும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ”டீல்”பேசினார்.இதில் சுமந்திரனின் பிரதான டீலாக தனக்கு வெளிவிவகார அமைச்சு,நிதி அமைச்சு அல்லது நீதி அமைச்சு வழங்கப்பட வேண்டும் என்பதே இருந்ததாக அக்கட்சிகளின் உள்வீட்டு தகவல்கள் வெளிவந்தன .
இதில் தமிழரசுக்கட்சியின் ஆதரவை பெற்றால் தமது சிங்கள வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்பதனை உணர்ந்த தேசிய மக்கள் சக்தி சுமந்திரனின் டீலை நிராகரித்த நிலையில் சஜித் பிரேம தாச வாய் மூல உறுதி மொழி மூலம் சுமந்திரனின் டீலை ஏற்றுக் கொண்டதாலேயே சுமந்திரன் தமிழரசுக்கட்சிக்குள் பலரது எதிர்ப்பையும் மீறி சஜித் பிரேமதாசவை தமிழரசுக்கட்சி ஆதரிக்கும் என்ற சர்வாதிகாரத்தன தீர்மானத்தை அறிவித்தார். ஆனால் சுமந்திரனுடனான டீலுக்கு கட்சிக்குள்ளேயே சஜித் பிரேமதாச கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி வந்தது.சுமந்திரன் கோரியதாக தெரிவிக்கப்படும் அந்த அமைச்சுக்களுக் காக காத்திருந்த மூத்த உறுப்பினர்கள் தமது எதிர்ப்புக்களை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தனர்.இவ்வாறான நிலையில் சஜித் பிரேமதாச படு தோல்வியடைந்ததால் சுமந்திரனின் ஆசை நிறைவேறவில்லை.
எனினும் தனது முயற்சியை சற்றும் கைவிடாத விக்கிரமாதித்தனைப் போல் பாராளுமன்றத்தேர்தலில் அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 113 ஆசனங்களைப் பெற எதிர்கொள்ளப் போகும் சவாலை பயன்படுத்தி அநுரகுமார அரசுக்கு கட்சி ரீதியாக ஆதரவளித்து அமைச்சுப்பதவியை பெறும் தனது அடுத்த நகர்வை சுமந்திரன் ஆரம்பித்துள்ளார். எனினும் இலங்கைத் தமிழரசு கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், இதன்படி புதிய அரசாங்கத்தில் சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் வெளியான செய்திகளை தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க மறுத்துள்ளார்.
வடக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தி எந்த கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவும் மறுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாங்கள் அவர்களுடன் பேசவில்லை. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தமிழரசுக்கட்சியின் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவே கூறினர். அவர்கள் இப்போது தேர்தலில் போட்டியிடுவதால் யாருக்கு ஆதரவு என்று தெரியாது. இந்த நேரத்தில் அவர்களுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் எங்களுக்கு தேவை கிடையாது. இதன்படி அவர்களுடன் எந்தத் தொடர்பும் கிடையாது. அரசாங்கத்தை அமைப்பதற்காக வேறு கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கின்றோம். இம்முறை தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களை பெற்றுக்கொள்வோம். இதனால் பாராளுமன்றத்தில் எவரின் உதவியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோன்றே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் 25 அமைச்சர்கள் பதவியை வகிப்பார்கள். அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களாகவே இருப்பார்கள். இதைவிட வேறு எவரையும் எமது கட்சியில் இணைத்துக் கொள்ளவோ அவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கோ நாம் தயாரில்லை என பிரதமர் ஹரிணி அமர சூரியவும் கிளிநொச்சியில் வைத்து அறிவித்து விட்டார்.
ஆனால் பாராளுமன்றத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அறுதிபெரும்பான்மையான 113 ஆசனங்களை பெறாது விட்டால் ஏனைய கட்சிகளின் ஆதரவை கோரவேண்டி ஏற்படும். சிங்கள ,முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி கோரும் நிலைப்பாட்டில் இல்லாததால் தமிழ் கட்சிகள் அரசுக்கு ஆதரவளிக்கும் வாய்ப்பிருந்தாலும் தமிழரசுக்கட்சியின் ஆதரவைப்பெற்று சிங்கள மக்களின் எதிர்ப்புக்களை சம்பாதிக்க தேசிய மக்கள் சக்தி விரும்பாது என்பதனால் சுமந்திரனின் அமைச்சுக் கனவு ,கனவாகவே இருப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது.
அதனால்தான் சுமந்திரன் ”அநுர தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் எனக் கூறினேனே தவிர அமைச்சுப் பதவியை பெற வேண்டுமென ஒருபோதும் கூறவில்லை. ஊடகங்கள் விளக்கமின்றி எழுதுகின்றன அல்லது வேண்டுமென்றே அப்படி எழுதுகின்றன ”என பல்டி அடித்துள்ளார்.