LOADING

Type to search

சினிமா

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Share

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 32 வயது நபரை காவல்துறை கைது செய்தனர்.

    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் (58). இவர் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 14ம் தேதி அதிகாலை அவர் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை காவல்துறை கைது செய்தனர். அவர்களுக்கு ஆயத சப்ளை செய்த மேலும் இரண்டு பேரையும் கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சல்மான் கானை கொலை செய்ய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் ஹெல்ப்லைனில் கடந்த 4ம் தேதி நள்ளிரவில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மிரட்டல் விடுத்தவர் மராட்டிய அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாகவும் காவல்துறை தெரிவித்தனர்.

சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோவிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும், அப்படிச் செய்யாவிட்டால் அவரைக் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சல்மான் கானுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை பலப்படுத்தினர். இது குறித்து மும்பை ஒர்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இந்த கொலை மிரட்டல் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தது தெரியவந்தது. உடனடியாக கர்நாடக மாநிலம் ஹாவேரிக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறை அங்கு வசித்து வந்த ஜல்ராம் பிஷ்னோய் (வயது35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், மிரட்டல் விடுத்தது அவர்தான் என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மும்பை அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஜல்ராம் பிஷ்னோயின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் என்று தெரியவந்தது. முழுமையான விசாரணைக்கு பிறகு மிரட்டல் பின்னணி தெரியவரும் என்று காவல்துறை தெரிவித்தனர்.