எதிர் பிரச்சாரங்களில் பெருமை கொள்ளும் சுமந்திரன் த.தே.கூ சிதைவுக்குக் காரணம் எனும் குற்றச்சாட்டை ஏற்கிறாரா?
Share
– மட்டு. மாவட்ட சங்குச்சின்ன வேட்பாளர் – ஜனா
(கனகராசா சரவணன்)
சுமந்திரன் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகச் செய்த சதியினை அம்பலப்படுத்துவதை தனது அரசியல் எதிரிகள் தனது பெயரை உச்சரிக்காது அரசியலை நடத்த முடியாது எனக் கூறுவதன் மூலம் தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொள்கிறாரா? என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்;ட வேட்பாளர் கோ.கருணாகரம் (ஜனா) கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு பட்டிருப்புத் தொகுதியிலுள்ள பழுகாமத்தில் 9ம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இக் கேள்விளை எழுப்பியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவு குறித்த கருத்து விடயத்தில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வடமாராட்சியில் நிகழ்ந்த ஊடக சந்திப்பொன்றில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முதலில் உடைத்து வெளியேறியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பதவி ஆசையே என மீண்டும் தன்மீதான தார்மீகப் பொறுப்பை கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் மீது சுமத்தியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதவி ஆசையால் உடைத்தனர் என அடுத்தவர் மீது விரல் நீட்டும் சுமந்திரன் அதே பதவி ஆசையால் தனது கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் எந்தவித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்தாத அவரது தான்தோன்றித்தனமான முடிவே கூட்டமைப்பின் இன்றைய நிலைக்கு காரணம் எனபதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
தனது அரசியல் எதிரிகள் தனது பெயரை உச்சரிக்காது தமது அரசியலை நடத்த முடியாது என பெருமையாக வேறு பேசிக் கொள்கிறார். அவ்வாறு அவர்கள் கூறுவதை தனது வெற்றியாகவும் தனக்கான பிரச்சாரமாகவுமே எடுத்துக் கொள்வதாகவே அந்த ஊடக சந்திப்பில் கூறியுள்ளார். உண்மையில் சுமந்திரன் இதனை புத்திக் கூர்மையுடன் கூறுகின்றாரா என்று எனக்கு ஐயமாக உள்ளது. அல்லது இக் குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக் கொண்டுதான் கூறுகின்றாரா என்றும் எனக்கு ஐயமுள்ளது.
எமது நாட்டு அரசியலைப் பொறுத்தவரை இலங்கை மத்திய வங்கிக் கொள்ளை பற்றிக் கூறுவதாயின் எவ்வாறு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பெயரை தவிர்க்கமுடியாதோ, ஹெல்பிங் ஏஜ் அம்பாந்தோட்டை பற்றிக் கூறினால் எவ்வாறு மகிந்த ராஜபக்சவைத் தவிர்க்க முடியாதோ, அக்காலத்துப் பிரபலமான அமைச்சர் ஒருவரது பத்து வீத கமிசன் என்றால் அந்த நிதியமைச்சரின் பெயர் எவ்வாறு தவிர்க்க முடியாதோ, அவன்ஹார்ட் மற்றும் ஊழல் பற்றிப் பேசினால் கோத்தபாயவை எவ்வாறு பேசாதிருக்கமுடியாதோ, அண்மைக்காலத்தில் மிகவும் பிரபலமான மருந்து மாபியா பற்றிப் பேசினால் ஹெகலிய ரம்புக்கல்லவை எவ்வாறு தவிர்க்கமுடியாதோ? இவ்வாறு எமது நாட்டில் பல பெயர்கள் பல பிரச்சினைகளில் தவிர்க்கமுடியாது உச்சரிக்கப்பட்டே ஆகவேண்டும்
அந்த வகையிலேயே ஐக்கியமாக முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இணக்கப்பாட்டுடன் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மரணிக்க வைத்து இறுதி ஆணியை சவப்பெட்டிக்கு அடித்த பெருமைக்குரியவர் சுமந்திரன். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவைப்பற்றிக் கூறும்போது சுமந்திரன் பற்றிக் கூறுவது தவிர்க்க முடியாது.
இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்திருந்தவர்கள் சிதைவின் பின்னர் சுமந்திரன் பெயரை உச்சரித்து இதனைக் கூறுகின்றார்களோயொழிய தமது அரசியல் இலாபத்துக்காகக் அவரது பெயரைக் கூறவில்லை. சுமந்திரன் புகழ் பாடுவதற்காக சுமந்திரன் பெயரைக் கூறவில்லை. சுமந்திரன் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகச் செய்த சதியினை அம்பலப்படுத்துவதற்காகவே அவரது பெயரை உச்சரிக்கிறார்கள்.
இவ்வாறு உச்சரிப்பது அவருக்குப் பெருமையா, அவருக்கு பிரபலமா, அதனை அவர் பெருமையாக நினைக்கின்றாரா?
இது உங்களுக்கு ஒரு பெருமைமிகு பிரச்சாரமா இதை நீங்கள் பெருமை மிகு பிரச்சாரமாகக் கருதுவீர்களென்றால் தங்கள் மீதான குற்றச்சாட்டை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? சுமந்திரன் தொடர்பாக எதிரணியினர் மட்டும் இக்குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. அவரின் தமிழரசுக்கட்சியினரும் அவரோடு இன்று யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அவரது சக வேட்பாளர்களும் கூட இந்தக் குற்றச்சாட்டுக்களை பகிரங்க மேடைகளில் கூறிவருகின்றார்கள். அவ்வாறெனில் உங்களுக்கெதிராக உங்களுடைய கட்சியினரே குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது உங்களுக்குப் பெருமையா என்பதனைக் கேட்டுக் கொள்கின்றேன்.
இதற்கான தகுந்த, பதிலினை 14ஆம் திகதி தமிழ்த் தேசியம் மீது பற்றுள்ள எம் தமிழ் மக்கள் தகுந்த பதிலடி மூலம் தமிழரசுக்கட்சியை மண்கவ்வ வைத்து தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.