LOADING

Type to search

இந்திய அரசியல்

மீனவர்களை விடுவிக்க மத்திய அமைச்சருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

Share

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

     ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 9-11-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துவதாகக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

09.11.2024 அன்று, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், 12.11.2024 அன்று, நாகப்பட்டினத்திலிருந்து மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024-ம் ஆண்டில் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் முதல்-அமைச்சர் கோடிட்டுக் காட்டியுள்ளார். எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.