“மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில இளைஞர்கள் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
Share
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தை நடத்தியது வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று தவறாக கூறப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜிக்கு கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளனர். கத்தியால் குத்திய இளைஞர்கள் 4 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்து மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். கத்தியால் குத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று தவறாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆவார். பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரது தாய் காஞ்சனா கடந்த 6 மாதமாக இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களாகவே மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர் ஏற்கனவே இதே மருத்துவமனையில் உதவியாளராக இருந்ததால், எப்போதும் போல மருத்துவமனைக்கு வருவது போல வந்து பாக்கெட்டில் கத்தி வைத்துக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தி விட்டார்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.