LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் மீது டிரோன், ராக்கெட் தாக்குதல் – ரஷியா

Share

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றுவதும், தாக்குவதும் பின்னர் அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்பதும் தொடர்ந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை இதில் பெரிய பலன் எதனையும் தரவில்லை. உக்ரைன் தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவ மற்றும் நிதியுதவியை வழங்கி வருகின்றன.

ரஷியாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. இது போரை தீவிரப்படுத்தும் செயல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதனால், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பலன் ஏற்படாது என்றும் கூறியுள்ளார். இந்த சூழலில், உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷியா வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு, பல மணிநேரம் வரை அதற்கான எச்சரிக்கை மணி அடித்தது. இதுபற்றி கீவ் நகரத்தின் ராணுவ நிர்வாகத்திற்கான தலைவர் செர்ஹி போப்கோ கூறும்போது, பாதுகாப்பு படைகள் பல்வேறு ராக்கெட்டுகளையும் மற்றும் 12 ஆளில்லா விமானங்களையும் தாக்கி அழித்துள்ளனர் என கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்கள் ஆய்வு செய்யப்படும் என்றார்.