விஜய் குற்றச்சாட்டு பிசுபிசுத்துப்போகும் – அமைச்சர் ரகுபதி
Share
2026ல் வலுவான கூட்டணி அமைக்கும் வாய்ப்பு பழனிசாமிக்கு நிச்சயமாக கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் போனதை போல, சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ்.யால் கூட்டணி அமைக்க முடியாது. 2024ல் முடியாதது, 2026ல் முடியாது. 2026ல் வலுவான கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இ.பி.எஸ்.,க்கு நிச்சயமாக கிடையாது. முதல்வர் நாற்காலியை விடாமல் ஸ்டாலின் பிடித்துக்கொள்வார். இதனை யாராலும் தடுக்க முடியாது. நிச்சயமாக மக்கள் ஸ்டாலினை முதல்வராக தேர்ந்து எடுப்பார்கள்.
ஆதாரம் இல்லாமல், ஆதவ் அர்ஜூனா வீட்டில் சோதனை நடத்துவதற்கு நீதிமன்றம் நல்ல விளக்கங்களை தரும். அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தெளிவான வழிகாட்டுதல்களை நமக்கு தந்துள்ளது. திருமாவளவன் தி.மு.க., கூட்டணியில் தொடர்வதாக உறுதியாக சொல்லிவிட்டார். சர்வாதிகாரிகளுக்கு தமிழகத்தில் ஒரு போதும் இடம் இல்லை; அப்படி யாராவது சொன்னால் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். யார் யாருடன் கூட்டணிக்கு போனாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் நண்பர்கள். நாங்கள் யாரும் ஒருவரையொருவர் விட்டு கொடுப்பது இல்லை. நடிகர் விஜய் எம்.ஜி.ஆர். பாணியை பின்பற்றப் பார்க்கிறார்; அது ஒருபோதும் நடக்காது; எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. தி.மு.க. மீது விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டு பிசுபிசுத்துப்போகும். நடிகர் விஜய் நிச்சயமாக தோல்வியை தான் சந்திப்பார். இவ்வாறு ரகுபதி கூறினார்.