அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கம்பர்லேண்ட் நகர சபையில் ‘தமிழர் மரபுரிமை வாரம்’ பிரகடனம் :- ஐங்கரன் விக்கினேஸ்வரா
Share
சிட்னியில் கம்பர்லேண்ட் நகர சபை எதிர்வரும் 2025 ஜனவரி 13 முதல் 19 வரை “தமிழர் மரபுரிமை வாரமாக” குறிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இத் தீர்மானத்திற்கான பிரேரணை கவுன்சிலர் சுஜன் செல்வனால் முன்மொழியப்பட்டது. பிரேரணைக்கு கவுன்சிலர் சுமன் சாஹா அவர்களால் ஆதரிக்கப்பட்டதுடன் நகர மேயர் கவுன்சிலர் ஓலா ஹமேட் மற்றும் மற்ற அனைத்து கவுன்சிலர்களால் ஆதரிக்கப்பட்டதும் குறிபபிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கம்பர்லேண்ட் நகர சபை அங்கீகரித்ததை சிட்னி வாழ் தமிழ் சமூகம் பெரிதும் பாராட்டியுள்ளது. அவுஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக Cumberland City Council என்ற உள்ளூராட்சி சபை, அடுத்த வருடம், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி உள்ளிட்ட வாரத்தை” தமிழர் மரபுரிமை வாரம்” (Tamil Heritage Week) என அறிவித்துள்ளமை புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புலம் பெயர் மண்ணில் எமது தாய் மொழியாகிய தமிழ் மொழியும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். இதற்கு அங்கீகாரமாக தற்போது சிட்னியில் ‘தமிழர் மரபுரிமை வாரம்’ பிரகடனம் வெளிவந்துள்ளது.
அதே போன்று பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் என்றென்றும் மதிக்கப்பட வேண்டியவை. தமிழ்மொழி போன்ற உலகின் மூத்த மொழி நிச்சயம் பாதுகாக்கப்பட்டே ஆக வேண்டும். அதனைப் பாதுகாப்பதற்கான வளமும், வலிமையும் இன்றைய சந்ததியுனரிலேயே தங்கியுள்ளது.
இன்றைய உலகம் பல சவால்கள் நிறைந்ததாக உள்ளது. எமது தலைமுறையில் நாம் எதிர்கொண்ட சவால்களை விடவும் அதிக சவால்களை தற்போதைய தலைமுறை எதிர்கொள்கின்றது. சவால்களை சிறப்பாக எதிர்கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதர்களாக விளங்க முடியும்.
இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ள தமிழ்மொழி அறிவு இன்றைய தலைமுறைக்கு அல்லது அடுத்துவரும் தலைமுறைக்கு அவசியமாக ‘தமிழர் மரபுரிமை வாரம்’ பிரகடனம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழி, பல நூற்றாண்டுகளாக, பல்வேறு போர்களையும், பிறமொழித் தாக்குதல்களையும் எதிர்கொண்டு, சமாளித்து நின்று நிலைத்த எம் தாய் மொழி தொடர்ந்தும் அவ்வாறு நிலை கொள்ள வேண்டுமாயின், புலம் பெயர் மண்ணிலும் நிலைத்து நிற்க பெரும் பணிகள் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கம்பர்லாந்து நகர சபை தமிழர் கலை கலாச்சார பண்பாட்டை கொண்டாடுவதற்காக அடுத்த ஆண்டு தைப்பொங்கல் நாளை ஜனவரி 13 – 19 வரையான நாட்களை தமிழர் மரபுரிமை வாரம் என பிரகடனப்படுத்தியுள்ளமை இங்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரமாகும்.