லாவோசில் விஷச்சாராயத்துக்கு சுற்றுலா பயணிகள் பலி – விடுதி உரிமையாளரிடம் விசாரணை
Share
தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ், சுற்றுலாவுக்கு பெயர்பெற்ற நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் சுற்றி பார்க்க வருகிறார்கள். கடுமையான சட்டங்களுக்கு அப்பாற்பட்டதாக லாவோஸ் உள்ளது. இதனால் மதுபோதை விருந்துகள் நடத்த சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைநகர் வியன்டியான் அருகே உள்ள வாங் வியங் நகரில் உள்ள பிரபல இரவு நேர மதுபான விடுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, வெளிநாட்டினர் உள்பட பலர் மது குடித்தபடி பொழுதை போக்கி கொண்டிருந்தனர். அப்போது வாயில் திடீரென நுரை தள்ளியபடி பலர் மயங்கி விழுந்தனர்.
உயிருக்கு போராடிய 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவர்கள் குடித்த மதுவில் விஷத்தன்மை இருந்தது தெரிந்தது. தகவலறிந்த காவல்துறை விஷச்சாராயம் குடித்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்தவர்களை மீட்டு தாய்லாந்துக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனளிக்காமல் அமெரிக்காவை சேர்ந்த ஒரு வாலிபர், டென்மார்க் நாட்டை சேர்ந்த இருவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவர், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் என வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் லாவோஸ் நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட மதுபான விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.