விரைவில் ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம்.. இஸ்ரேல் தூதர் மைக் ஹெர்சாக் தகவல்
Share
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான சண்டையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மறுநாளில், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்தது. தாக்குதல் தீவிரமடைந்த நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் வான் தாக்குதலை தீவிரப்படுத்தியதுடன் தரைவழி தாக்குதலும் நடத்தியது. இந்த சண்டையில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நீடிக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் எட்டப்படலாம் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் மைக் ஹெர்சாக் கூறி உள்ளார். தூதர் மைக் ஹெர்சாக் இஸ்ரேலிய ராணுவ வானொலிக்கு அளித்த பேட்டியில், “போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன் இன்னும் சில பிரச்சினைகள் எஞ்சியுள்ளன. எந்தவொரு ஒப்பந்தமாக இருந்தாலும் அரசாங்கத்தின் ஒப்புதல் தேவை. ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.