பிரித்தானியாவின் இலண்டன் மாநகரில் நடைபெற்ற ’இசைமணி’ பட்டமளிப்பு விழா (Academy of Fine Arts – London)
Share
அரங்கம் நிறைந்த கலாரசிகர்கள் மத்தியில் Academy of Fine Arts (London) இன் பட்டமளிப்பு விழா Alperton community school hall இல் மிக விமர்சையாக 10.11.2024 ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது. அன்றைய நிகழ்வுக்கு வைத்திய கலாநிதி க சிவகுமாரும் துணைவியார் வைத்திய கலாநிதி சாந்தினி சிவகுமாரும் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர். இப்பட்டமளிப்பு விழாவில் 35 மாணவ மாணவிகள் இசைமணி பட்டத்தினை வாய்ப்பாட்டு, வீணை வயலின், மிருதங்கம் ஆகிய பாடங்களில் பெற்றிருந்தனர்.
1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை அமரர் ஸ்ரீமதி சங்கீத வித்வான் சரஸ்வதி பாக்கியராஜா அவர்கள் ஏற்றிருந்தார்கள். 1991 ஆம் ஆண்டு முதலாவது பரீட்சையை நடத்திய Academy of Fine Arts (London)க்கு அவுஸ்ரேலியா நியூஸ்லாந்து ஆகிய நாடுகளிலும் கிளைகள் உள்ளன. அங்கும் மாணவர்கள் சிறப்புறக் கற்றுப் பரீட்சையில் அமர்கின்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தினால் இதன் பரீட்சைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதும் சிறப்பான விடயமாகும். ஆசிரியத் தர பரீட்சை எடுத்து இசைமணிப் பட்டம் பெற்றவர்கள் , தங்களது இன்னொரு பட்டப் படிப்புடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டப் படிப்பை மேற்கொள்ளலாம். இத்தகவல்களை இன்றைய அறங்காவலர் தலைவர் கலாநிதி இ நித்தியானந்தன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதம விருந்தினர் தனது உரையில் , தமிழ் பாரம்பரியக்கலைகளை ஊக்குவிக்கும் நோக்கில் மாணவர்களை ஊக்குவிக்கும் இந்த அமைப்புக்குத் தன் வாழ்த்தைக் கூறியதுடம் ஸ்ரீமதி சரஸ்வதி பாக்கியராஜா முதலானவர்களின் அர்ப்பணிப்பையும் விதந்துரைத்தார். Academy of Fine Arts (London) பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தி அனுப்பும் ஆசிரியர்கள் மேடையில் அமர்ந்திருக்க மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றமை அழகாக இருந்தது. அத்துடன் அந்த ஆசிரியர்களுக்குப் பொன்னாடையும் மலர்க்கொத்தும் வழங்கிக் கௌரவித்தமை நல்ல விடயமாகும்.
அதன் பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் சபையோரை இன்னொரு கலை உலகிற்குக் கூட்டிச் சென்றது.ஸ்ரீமதி சிவதாரணி சகாதேவனின் மாணவர்கள் வழங்கிய வீணை இசை, ஸ்ரீமதி பத்மினி குணசீலன் அவர்களின் மாணவிகளின் நடனம், யசோதா மித்திரதாஸ் அவர்களின் மாணவிகளின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, ஸ்ரீமதி கௌசல்யா சத்தியலிங்கத்தின் மாணவ மாணவிகளின் வயலின் இசை, திரு மணிபல்லவம் சாரங்கனின் மாணவர்கள் வழங்கிய வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, ஸ்ரீ AGA ஞானசுந்தரம் அவர்களின் மாணவர்கள் வழங்கிய வயலின் இசை, ஸ்ரீ பரமசாமி கிருபாகரனின் மாணவர்களின் மிருதங்க இசை, ஸ்ரீமதி திலகசக்தி ஆராமுதனின் மாணவர்கள் வழங்கிய வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகள் சபையைக் களைகட்ட வைத்தது.
பட்டமளிப்பு விழாவின் தரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்வுகள் மிக நேர்த்தியாகவும் சபையினர் புருவம் உயர்த்தி ஆச்சரியப்படும் வகையில் கலைத்துவமிக்கதாகவும் அமைந்தமை Academy of Fine Arts (London) அமைப்பு மீதான நம்பிக்கையையும் பெருமையையும் தந்ததென்றே சொல்ல வேண்டும்.