LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை

Share

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிப்பு

இலங்கையில் மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரம் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமார் 37 வருடகாலமாக நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையால் நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான பலனும் இதுவரையில் கிடைக்கவில்லை.

மாறாக இலங்கையில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலான நிலைமையே காணப்படுகிறது.

எனவே சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்காத வகையிலான அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டத்தை எமது அரசாங்கம் முன்வைக்கும்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாக கூறிய இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தை ஆரம்பகாலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அமைச்சரவையில் கூட அனுமதி பெறாமலுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

எனவே பயனற்ற மாகாண சபை முறைமைக்கு பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையை பெற்றுக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுகின்றது.

இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆட்சி அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலங்களே ஆகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து செயற்பட்டாலும், நிரந்தர தீர்வுகளுக்கான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம். என தெரிவித்தார்.