“ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டு மனமுடைந்தேன்” – ராகுல் காந்தி
Share
ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டு மனமுடைந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன. தொடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வெள்ளநீர் சூழ்ந்த வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை, ரயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கனமழையால் திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், மண் சரிவில் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டு மனமுடைந்தேன். புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தங்களின் உடைமைகளை இழந்தவர்களுக்கு ஆறுதலையும் கூறிக்கொள்கிறேன். காங்கிரஸ் தொண்டர்கள் உடனடியாக நிவாரண உதவிகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.