வட்டுவாகல் பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படவேண்டும்; இலங்கைப் பாராளுமன்ற கன்னி உரையில் து.ரவிகரன் எம்.பி.
Share
ந.லோகதயாளன்.
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமஅலுவலர் பிரிவில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் புதிதாக அமைக்கப்படவேண்டும் எனவும் இதற்கு எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீட்டை உள்வாங்குமாறும் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அவரது கன்னியுரையில் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றில் 4ம் திகதி புதன்கிழமை அன்ற்றைய தினம் தனது கன்னியுரையாற்றும்போதே இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தினார்.
நாடாளுமன்றில் வர தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கு வாக்களித்த முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களைச்சேர்ந்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பலத்த அழிவுகள் ஏற்பட்டன. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது.
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களின் துன்பங்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
பலத்த வெள்ள அனர்த்தம் காரணமாக பல வீதிகள் பாதிக்கப்பட்டதுடன், பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூடி நெற்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. மக்கள் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். மீனவர்கள் தொழிலுக்குச் செல்லமுடியாமல் காற்று, தொடர் மழை, பலத்த கடல்சீற்றம் போன்ற இந்த மிக மோசமான அனர்த்தம் காரணமாக மிகவும் நொந்துபோயுள்ளனர்.
எனவே விவசாயிகள், மீீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும்.
பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மூன்று மாவட்ட செயலகங்களிலும் விசேட அனர்த்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களை நடாத்தி அனர்த்தப் பாதிப்பு நிலைமைகள் தொடர்பில் அறிந்துகொண்டார். இந்தக் கூட்டங்களில் ஏனைய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். துன்பங்களில் பங்கேற்றனர். அதிகாரிகளும் இடர்காலத்தின்போது தீவிரமாக உதவினர். அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த விடயங்களுடன் ஒரு முக்கியமான விடயம், முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமஅலுவலர்பிரிவில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் கடந்த 1955ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கின்றனர்.
பலத்த துன்பத்தை முல்லைத்தீவில் இருக்கும் இந்தப் பாலமும் அனுபவித்துவருகின்றது.
2009இறுதி யுத்தத்தின்போது பாரிய சேதங்களுக்கு உள்ளானது. அதற்கு முன்பும்சரி, பின்பும் சரி பாலத்தின் இரு ஓரங்களிலும் பாதுகாப்பு கற்கள்கூட இல்லாமல் காணப்படுகின்றது.
மழைக்காலங்களில் நீரில் மூழ்கும் இந்தப் பாலத்தால் பயணிக்கும் மக்களும் துன்பத்தை சொல்லில் வடிக்கமுடியாது.
சமார் 600மீற்றர் நீளமான பாலத்தினை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் இந்தப் பாலத்தினைப் பயன்படுத்திவருகின்றனர்.
முல்லைத்தீவு பலத்த அழிவுளை எதிர்நோக்கிய ஒரு மாவட்டமாகும். வேறெங்காவது தென்பகுதிகளில் இதுபோன்றதொரு பாலம் இருந்திருந்தால் எப்போதோ புதிய பாலம் அமைக்கப்பட்டிருக்கும்.
தொடர்ச்சியாக பலத்த இடர்பாடுகளைச் சந்தித்துவரும் முல்லைத்தீவு மக்களைப்போல் இந்தப் பாலமும் மக்களோடு சேர்ந்து துன்பத்தை அனுபவித்தே வருகின்றது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேளுங்கள் இந்த வட்டுவாகல் பாலத்தின் தேவையை, அவசியத்தைப்பற்றிச் சொல்வார்கள்.
தயவு செய்து நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாரளுமன்ற ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் இந்த வட்டுவாகல் பாலத்தை புதிதாக நிர்மானிப்பதற்கு ஆதரவுதாருங்கள்.
இந்த வட்டுவாகல் பாலத்தை புதிதாக நிர்மாணிக்க, அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் உள்வாங்குகள் – என்றார்