‘பிரமயுகம்’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் மோகன்லால் மகன் பிரணவ்?
Share
நடிகர் மம்முட்டி நடிப்பில் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘பிரமயுகம்’. பிரபல மலையாள இயக்குனர் ராகுல் சதாசிவம் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் ஹாரர் திரில்லர் படத்தை ராகுல் சதாசிவம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தில் நடிகர் மோகன்லாலின் மகனும் நடிகருமான பிரணவ் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரணவ், 2015-ல் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் இவரது நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான ‘ஹிருதயம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’. சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரணவின் தாயார் சுசித்ரா, தனது மகன் விவசாய பண்ணையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.