‘200 தொகுதிகளில் வெற்றி என்பது மிகபெரிய நகைச்சுவை’ – செல்லூர் ராஜு
Share
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று சொல்வது வேடிக்கையானது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது; “சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் சொல்வதுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பதவிகளை வழங்கி, இன்று குடும்ப ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமா துறையில் இருந்து வந்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், யாரையோ தாக்க வேண்டும் என்பதற்காக சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று கூறுவது வேடிக்கையானது. சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்கள் தங்கள் குடும்பத்தை முதலில் திருத்த வேண்டாமா? புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது 100 சதவீதம் உண்மையானது. திருமாவளவனை பொறுத்தவரை, அவருக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது. ஆனால் மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அவர் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார் என்று நான் கருதுகிறேன்.” இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார்.