“ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் விரைவில் முடிவு எடுப்போம்” – திருமாவளவன் பரபரப்பு பேட்டி
Share
விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் விரைவில் முடிவு எடுப்போம் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி தொண்டரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் திருமாவளவன் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் விசிக இடம் பெற்றுள்ளது. புதிதாக ஒரு கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவை இல்லை. திமுக கூட்டணியை கலைக்க எதிர்க்கட்சியினர் திட்டம் தீட்டுகின்றனர்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாமல் தடுக்க கூட்டணியை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியை கருவியாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர். ஆதவ் அர்ஜூனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உணர்ந்துள்ளனர். அதனை அவர்கள் தலைமை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து கலந்து ஆலோசித்துள்ளோம். இது தொடர்பான முடிவை விரைவில் அறிவிப்போம். தவெக தலைவர் விஜய் மீது எந்த ஒரு சங்கடமும் இல்லை. என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை, அதற்கான சூழலும் இல்லை. தவெக தலைவர் விஜயும், நானும் ஒரே மேடையில் நிற்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையிலேயே அதை அரசியல் ஆக்கினார்கள். இது இருவரும் ஒரே மேடையில் நின்றால் அதை எவ்வளவு அரசியல் ஆக்குவார்கள். இப்படி பட்ட சக்திகளிடம் இருந்து என் கட்சியை காப்பாற்றுவதற்காக தான் இந்த முடிவை எடுத்தேன்” இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.