சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படையினர்: அதிபர் விமானம் மாயம்
Share
வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நெடுங்காலமாகவே மன்னராட்சி, சர்வாதிகாரம், ஒரு நபர் ஆட்சி அல்லது ஒற்றைக் கட்சியின் ஆட்சி என ஆட்சிமுறை நடைபெற்று வந்தது. இதற்கு எதிராக துனிசியாவில் தொடங்கிய மக்கள் புரட்சி வெற்றிபெற்று மக்களாட்சி முறைக்கு வழிவகுத்தது. இதனை வரலாற்றாய்வாளர்கள் ‘மல்லிகைப் புரட்சி’ என எழுதினர். துனிசியாவில் பற்றி எரிந்த போராத்தின் கணல் அருகருகே வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி மக்கள் புரட்சிக்கு வித்திட்டன.
வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம், அடக்குமுறை, ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல்கள், கட்டுப்பாடுகள், காவல்துறை-ராணுவத்தின் அடக்குமுறைகள் என நெடுங்காலமாக புகைந்து கொண்டிருந்த மக்களின் மனநிலை போராட்டமாக உருமாறி பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ, சிரியா, லிபியா பரவி பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இந்த ஒட்டுமொத்தப் புரட்சியை `அரபு வசந்தம்’ என அழைத்தனர். இந்தக் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக, சிரியாவிலும் அல்-அஸாத் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டத்தை துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அடக்குமுறைகள் மூலம் அல்-அஸாத் அரசு அடக்கியது. அதையடுத்து, அந்தப் போராட்டம் உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அல்-அஸாதின் அரசை அகற்றுவதற்காக, பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத மற்றும் நிதியுதவி அளித்தன. அதே நேரம், அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும் செயல்பட்டது. தலைநகா் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட பெரும்பாலான சிரியா பகுதியை அரசுப் படையினா் கைப்பற்றுவதற்கு ரஷியா உதவியது.
இத்லிப் மாகாணம், அலெப்போ மாகாணத்தின் சில பகுதிகள், ராக்கா, ஹசாகாவின் பெரும்பாலான பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் மட்டும் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தச் சூழலில், சமீபத்தில் அலெப்போ மாகாணத்தில் கிளா்ச்சிப் படையினா் திடீரென தாக்குதல் நடத்தி அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றினா். இந்த அதிரடி தாக்குதலை எதிா்பாா்க்காத ராணுவம் பின்வாங்கயது. தொடா்ந்து உறுதியாக முன்னேறி வந்த கிளா்ச்சிப் படையினா், அலெப்போ நகரைக் கைப்பற்றினா். கடந்த 2016-ஆம் ஆண்டில் ரஷிய வான்வழித் தாக்குதலின் உதவியுடன் அரசுப் படையினரால் மீட்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரம், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்தது.
இது தவிர, கிளா்ச்சிப் படையினா் மேலும் தாக்குதல் நடத்தி தலைநகா் டமாஸ்கஸை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, அந்நகரை சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்த அரசு படை வீரர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியதால் சிரியா திபர் பஷார் அல்-ஆசாத் டமாஸ்கசை விட்டு வெளியேறினார். இதனைத்தொடர்ந்து தலைநகர் டமாஸ்கஸ் எல்லைப் பகுதியில் பஷார் அல்-ஆசாத்தின் தந்தை சிலையை கிளர்ச்சியாளர்கள் உடைத்தனர். மேலும் டமாஸ்கசில் முக்கிய சிறையிலிருந்து கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர். இந்நிலையில் சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தப்பிச் சென்ற விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதான்ல அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.