அர்ஜுனா தன்னைத் தெரிந்தெடுத்த மக்களுக்கு எதைப் பெற்றுக்கொடுப்பார்?
Share
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
மருத்துவர் அர்ஜுனா தமிழரசியலின் சீரழிவைக் காட்டும் ஒரு கார்ட்டூன் போல ஆகிவிட்டார். கடந்த திங்கட்கிழமை அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தியோடு வாக்குவாதப்பட்டிருக்கிறார்.
சத்தியமூர்த்திக்கு எதிராகவும் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு எதிராகவும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைத் தனியாக ஆராய வேண்டும். குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் அதை முறைப்படி அணுக வேண்டும். ஆனால் அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரச நிர்வாகத்தில் ஒர் ஒழுங்கு முறை உண்டு. மருத்துவ நிர்வாகத்துறை தொடர்பில் முறைப்பாடுகள் இருந்தால் அதனை மாகாண நிர்வாகத்திற்கு அறிவிக்க வேண்டும். அல்லது ஆளுநருக்கு அறிவிக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குத் தெரிவிக்கலாம். அந்த மேலிடத்துக்கூடாகத்தான் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்கலாம்.
அதை விட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்குள் நேரடியாக இறங்கி தமிழ்த் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் போல செயல்படுவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழகல்ல. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இது போன்ற விடயங்களில் நேரடியாக சம்பந்தப்படத் தேவையில்லை. மருத்துவ நிர்வாகத் துறையில் வேலை செய்த அர்ச்சுனாவுக்கு இது தெரியாமலிருக்க நியாயமில்லை. எனினும்,தெரிந்து கொண்டும் அவர் ஏன் அந்தத் தவறைச் செய்தார்?
இதற்கு இரண்டு காரணங்களைத்தான் கூறலாம். முதலாவது காரணம், அவர் வழமையாக அப்படித்தான் எதையும் அதற்குரிய முறைக்கூடாக அணுக மாட்டார். ஏடாகூடமாகத்தான் அணுகுவார். தானே எல்லாவற்றுக்குள்ளும் தலையை ஒட்டி, தன்னை முதன்மைப்படுத்தி, அதை நேரலையில் ஓடவிட்டு, அதன்மூலம் தன்னை பிரபல்யப்படுத்துவது. தன்னை எப்பொழுதும் சர்ச்சைகளின் மையத்தில் வைத்திருப்பது.
இப்படிப்பட்ட ஒரு நடைமுறைக்கூடாகத்தான் அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வர முடிந்தது. இதற்கு முன்னரும் சாவகச்சேரி ஆஸ்பத்திரி சம்பந்தப்பட்ட விடயங்களிலும் அவர் அவ்வாறுதான் தன்னை முதன்மைப்படுத்தி, நேரலையில் தோன்றி, தன்னை ஒரு கலகக்காரனாக மேலுயர்த்தினார். அப்படித்தான் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியிலும் அவர் நிர்வாகத்துக்குள் தலையை ஒட்டி தன்னை ஒரு கலகக்காரனாகக் காட்டப் பார்க்கின்றார்.
இரண்டாவது காரணம், அவர் சத்தியமூர்த்தி மீது கோபமாக இருக்கிறார். அவர் சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் தனது கலகத்தைத் தொடங்கியதிலிருந்து மருத்துவர் சத்தியமூர்த்திக்கு எதிரானவராகத்தான் காணப்படுகிறார்.கருத்துத் தெரிவித்து வருகிறார். அவர் தேர்தலில் நின்ற பொழுது ஒரு சம்பவம் நடந்தது. தேர்தல் தினத்தன்று சத்தியமூர்த்தி வாக்களித்து விட்டு அதைத் தனது முகநூலில் பதிவிட்டார். அந்தப் பதிவின் கீழ் குறிப்பு எழுதிய ஒருவர் “அர்ஜுனாவுக்குதானே போட்டனீங்கள்?” என்று பகிடியாகக் கேட்டிருந்தார். அதற்கு சத்தியமூர்த்தி “எங்களை பார்த்தல் சீத்த சுவாதீனம் இல்லாதவர்கள் போன்று தோன்றுகின்றதா” என்று பதில் போட்டிருந்தார். சத்தியமூர்த்தி அப்படிப்பட்ட ஒரு குறிப்பைப் போடாமல் விட்டிருக்கலாம். அர்ஜுனா சத்தியமூர்த்தியைப் பழிவாங்க முயற்சிக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தனக்கு இருக்கும் சிறப்புரிமைகளின் அடிப்படையில் தான் அவ்வாறு நடந்து கொள்ளலாம் என்று அவர் நம்புகிறாரோ தெரியவில்லை.
அந்தச் சம்பவத்தில் அவருக்கும் சத்தியமூர்த்திக்கும் இடையில் நடந்த உரையாடலில் அவர் சத்தியமூர்த்தியைப் பார்த்து அவர் தன்னை “சேர்” என்று அழைக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தான் உயர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் சத்தியமூர்த்தி அதை ஏற்றுக்கொள்ளவில்லை
இங்கேயும் ஒரு பழி வாங்கும் படலம் உண்டு. சாதகச்சேரி மருத்துவமனை அத்தியச்சகராக இருந்த போது, அர்ஜுனா மருத்துவ நிர்வாகத்துக்கு எதிராக நேரலையில் தோன்றி கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்த வேளையில், அவருக்கும் யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரிக்கும் இடையே ஒரு தொலைபேசி முரண்பாடு வந்தது. அதில் சட்ட மருத்துவர் அதிகாரி தனக்கு ஜூனியரான அர்ஜுனா தன்னை சேர் என்று அழைக்க வேண்டும் என்று கேட்கிறார். அதைத் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிரங்கப்படுத்திய அர்ஜுனா, அதன்மூலம் அதிகம் அனுதாபத்தைத் தேடிக் கொண்டார். அதில் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி அதிகம் நிந்திக்கப்பட்டார்.
இப்பொழுது அச்சுனா அதற்கும் பழி வாங்குகிறார். தன்னை சேர் என்று அழைக்குமாறு கேட்ட ஒரு மருத்துவ நிர்வாக கட்டமைப்பை நோக்கி தன்னை அவ்வாறு சேர் என்று அழைக்க வேண்டிய ஒரு வளர்ச்சிக்குத் தான் உயர்ந்துவிட்டதை உணர்த்த முற்படுகின்றார். ஒவ்வொருவரும் தாங்கள் உயரத்தில் இருப்பதாகக் கருதும்போது தமக்குக் கீழிருப்பவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளை அவர்களுடைய கட்சித் தொண்டர்களில் ஒருபகுதியினர் அவ்வாறுதான் அழைக்கிறார்கள். சுமந்திரனுடைய விசுவாசிகளை விமர்சிப்பவர்கள் அதைச் சுட்டிக் காட்டுவதுண்டு. ஒரு மூத்த சட்டவாளர் என்ற அடிப்படையில் சுமந்திரனுடைய ஜூனியரான சட்டவாளர்கள் அவரை சேர் என்று அழைப்பார்கள். சீனியரை ஒரு ஜூனியர் சேர் என்று அழைப்பது நாட்டில் பல துறைகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏன் அதிகம் போவான்? பல்கலைக்கழகங்களில் புகுமுகமானவர்களை சீனியர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள்? ஒரு சீனியரான மாணவர் ஜூனியரிடம் எதை எதிர்பார்க்கிறார்? இன அழிப்புக்கு உள்ளான தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்த நிலை மாறியுள்ளதா? இல்லையே ? அது காலனித்துவ காலத்தின் எச்சம்.
வெள்ளைக்காரர்களுக்குக் கீழ் கூனிக் குறுகி வேலை செய்து பழக்கப்பட்ட “கறுப்பு வெள்ளைக்காரர்கள்” தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் தங்களை அவ்வாறு மதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அந்த மனோநிலையைத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சிலரும் பிரதிபலிக்கின்றார்கள். காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து மனதால் விடுதலை பெறாத பலர் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. அவர்கள் எல்லாரும் தங்களிடம் சேவை பெற வருகிறவர்களும் தங்களுடைய ஜூனியர்களும் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களும் தங்களை “சேர்” என்று அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.
அவ்வாறு தன்னை அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பல மூத்த அதிகாரிகள் தங்களுக்கு மேலே இருக்கும்,தங்களுக்கு உத்தரவிடும் அமைச்சர்களுக்கு முன் கூனிக்குறுகி நிற்பார்கள். அமைச்சரை “சேர்” என்று அடிக்கடி விழிப்பார்கள். இத்தனைக்கும் அமைச்சர் அதிகம் படித்தவராக இருக்க மாட்டார். இந்த அதிகாரியின் அறிவுக்கும் கல்வித் தகைமைக்கும் மூப்புக்கும் கிட்டவர முடியாதவராகவும் இருப்பார். ஆனால் இலங்கைத் திருநாட்டில் அதுதான் வழமை. அறிவில்லாத, படியாத, கண்ணியமில்லாத, தமது சொந்த மக்களை ஏமாற்றுகின்ற, அரசியல்வாதிக்கு முன் படித்த நிர்வாக அதிகாரிகள் கூனிக்குறுகி நின்று சேர் என்று விழிப்பது. அதைத்தான் அர்ஜுனா சத்தியமூர்த்தியிடம் எதிர்பார்க்கிறாரா? அவர் அதனை ஒரு பழி வாங்கலாகச் செய்தாரா?.
ஆனால் நாட்டின் ஜனாதிபதியை அவருடைய கட்சிக்காரர்களில் ஒரு பகுதியினர் “தோழர்” என்றுதான் விழிக்கிறார்கள். அவரை சேர் என்றோ அதிமேதகு என்றோ மேன்மைமிகு என்றோ அழைப்பதில்லை. அனுரவும் அவ்வாறு எதிர்பார்ப்பவராகத் தெரியவில்லை. இனப்பிரச்சினை தொடர்பான என்பிபி அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் சிங்கள அரசியலில் மேட்டுக்குடி அரசியல் பாரம்பரியத்தில் இருந்து ஒரு புதிய பாரம்பரியத்தை என்பிபி அரசாங்கம் அறிமுகப்படுத்துமாக இருந்தால் அதை தமிழ்த் தரப்பு மனம் திறந்து பாராட்டலாம்.
அவ்வாறு சிங்கள அரசியலில் மேட்டுக்குடி பாரம்பரியத்தில் இருந்து சில பெயர்வுகள் இடம்பெறத் தொடங்கியிருக்கும் ஒரு காலகட்டத்தில், தமிழ் அரசியலில் ஒரு இளம் நாடாளுமன்ற உறுப்பினர், தான் ஏற்கனவே வேலை பார்த்த மருத்துவ நிர்வாகக் கட்டமைப்பைப் பழிவாங்கும் மனோநிலையோடு அணுக முற்படுகிறாரா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மறக்க முடியாத ஒரு தண்டனையை வழங்கினார்கள். அதேசமயம் அர்ச்சுனாவைத் தெரிந்தெடுத்ததன்மூலம் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே தண்டித்துள்ளார்கள் என்று அர்ச்சுனா நிரூபிக்கப் போகிறாரா?