LOADING

Type to search

இந்திய அரசியல்

“சமூக நீதி காவலராக திகழ்ந்தவர் பெரியார்” – கேரள முதலமைச்சர் பேச்சு

Share

பெரியார் சமூக நீதி காவலராக திகழ்ந்தார் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

     கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோயில் நுழைவுப் போராட்டம் நினைவாக,1994-ல் தந்தை பெரியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடத்தை புனரமைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். இதில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர்களுக்கான மாடம், சிறுவர் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. 1994-ல் திறக்கப்பட்ட இந்த நினைவகம், தற்போது ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் துவங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா சென்றார். இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் பங்கேற்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் எ.வ.வேலு, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. , திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் அங்கு நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மேடையில் பேசியதாவது, “முற்போக்கு சிந்தனைக்கு எதிராக அந்த காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட்டதால் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர் பெரியார். தமிழ்நாட்டில் 1952ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு பின்னால் பெரியார் இருந்தார். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்குப் பெரியாருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. சமூகநீதியைக் காக்கவும், சாதி பாகுபாட்டை எதிர்க்கவும் ‘குடியரசு’ பத்திரிகையை பெரியார் நடத்தினார். சமூக நீதி காவலராக பெரியார் திகழ்ந்தார். மதம் மற்றும் கடவுளின் பெயரில், கல்வி தடுக்கப்பட்டதைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். சமத்துவத்தை வலியுறுத்திய பெரியார் அதன் வழியிலே செயல்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. வர்ணாசிரம கோட்பாடுகளைத் தனது கொள்கைகள் மூலம் முறியடித்தவர் பெரியார் ஆவார். சமூக நீதி என்ற மையப் பொருளைக் கொண்டு அனைவருக்கும் சமத்துவம், சுதந்திரம் போன்றவற்றை வலியுறுத்தியவர் பெரியார் ஆவார். பெரியார், வைக்கம் கோயில் நடைபாதையில் ஒடுக்கப்பட்டோர் நடக்கும் உரிமை பெற்றுத் தர நடந்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பெரியாரைத் திருவாங்கூர் சமஸ்தான அரசு கைது செய்ய சிறையில் அடைத்தது. இருப்பினும் தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைப் போராட்டத்திற்காக அழைத்து வந்தார். மகாராஷ்டிராவில் ஜோதி பாய் பூலே சாவித்திரி பாய் பூலே போல் தமிழ்நாட்டில் பெரியார் நாகம்மை தந்தை தம்பதி போராடியது. வைக்கப் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது” இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.