LOADING

Type to search

கனடா அரசியல்

எமது தமிழர்களின் வரலாற்றில் புதிய அமைப்புக்கள் தோல்விகளிலிருந்தே தோற்றம் கொள்கின்றன.

Share

கனடாவில் நடைபெற்ற “அனைத்துலகத் தமிழர் பேரவை” அமைப்பின் அறிமுகக் கருத்தரங்கில் அமைப்பின் இடைக்கால நிர்வாகசபையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவிப்பு

எமது தமிழர் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த வரலாற்றில் புதிய அமைப்புக்கள் தோற்றம் பெறுவதும், அவ்வாறு தோற்றம் பெறும் அமைப்புக்கள் காலவோட்டத்தில் நிலைக்க முடியாமல் சிதைந்து போவதும் அரசியல், சமூக இயங்குநிலையில் தவிர்க்க முடியாதவையாகும். நமது ஈழ அரசியல் வரலாற்றில் பல கட்சிகள் உருவாகியிருக்கின்றன – பல இயக்கங்கள் தோற்றம்பெற்றிருக்கின்றன – அதே போன்று, காலத்திற்கு காலம் பல அமைப்புக்கள் முகம் காட்டியிருக்கின்றன. இவ்வாறு தோற்றம் பெற்ற கட்சிகள், இயக்கங்கள், அமைப்புக்களில் சிலது நிலைக்க, பலதோ, காலவோட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சிதைவுற்றிருக்கின்றன”.
இவ்வாறு கடந்த 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற ‘அனைத்துலக தமிழர் பேரவை’ யின் அங்குரார்ப்பணம் மற்றும் அறிமுகக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய அரசியல் செயற்பாட்டாளரும் கணக்காளருமான நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தெரிவித்தார். மேற்படி புதிய அமைப்பின் இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

“அரசியல் சூழ்நிலைகள் மாறுகின்றபோது, குறிப்பிட்ட சூழ்நிலையின் சவால்களை எதிர்கொள்ள முடியாத அமைப்புக்கள் சிதைவடைவது வரலாற்றில் தவிர்க்க முடியாதது. சூழ்நிலைகளே ஒரு ஸ்தாபனத்தின் தேவையை இல்லாமலாக்குகின்றது – அதே சூழ்நிலைதான், புதிய அமைப்புக்களின் தேவையையும் நிர்பந்திக்கின்றது – இந்த யதார்த்தத்தை நாம் புறம்தள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாம் வரலாற்றில் பின்தங்கியவர்களாகவே இருப்போம்.

ஈழப் போர் முடிவுற்று பதினைந்து வருடங்களாகின்றன. இந்த பதினைந்து வருடங்களில் நாம் எதிர்பார்த்த விடயங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எந்தவொரு முன்னேற்றத்தையும் எங்களால் நிரூபிக்க முடியவில்லை. பலர் அமைப்புக்களாகவும், குழுக்களாகவும், தனிநபர்களாகவும் பலவாறான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மைதான் ஆனாலும் நாம் தொடர்ந்தும் பின்னடைவுகளையே சந்தித்துவருகின்றோம். பதினைந்து வருடங்களில் தாயக அரசியல் சூழலும் மாறிவிட்டது. நடந்து முடிந்த சிறிலங்காவின் பொதுத் தேர்தலில் வடக்கில் தமிழ்த் தேசிய கட்சிகள் பின்னடைவை சந்தித்திருப்பதானது, தாயக மக்கள் தொடர்ந்தும் செயலற்ற தமிழ்த் தேசிய அரசியலின் பக்கமாக அணிதிரள்வதற்குத் தாயாரில்லை என்னும் செய்தியையே வெளிப்படுத்திநிற்கின்றது. இது நம் அனைவருக்குமான சிகப்பு எச்சரிக்கையாகும்.

முள்ளியாவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் சூழலில் தமிழ் புலம்பெயர் சமூகம்தான், தாயகத்திற்கான அரசியல் பின்தளமாக விளங்கியது. ஆனால் நடைமுறையில் தமிழ் புலம்பெயர் சமூகம் உண்மையிலேயே ஒரு அரசியல் பின்தளமாகத் தொழிற்படுகின்றதா என்னும் கேள்வியை, நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஏனெனில் ஆரம்பத்தில் புலம்பெயர் சமூகம் தொடர்பில் தாயகத்தில் காணப்பட்ட நம்பிக்கை தற்போது இருப்பதாகக் கூற முடியாது. நிலைமைகள் வேகமாக மாறிவருகின்றன. பதினைந்து வருடகால ஏமாற்றங்களே இதற்கான பிரதான காரணமாகும்.

ஒரு இனப்படுகொலைக்கு ஆளான மக்கள் கூட்டத்தை பிரதிநித்துவம் செய்யும் புலம்பெயர் சமூகம் என்னும் வகையில், நாம் கடந்த பதினைந்து வருடங்களாக எமக்கான நீதியை கோரிவருகின்றோம். ஆனால் இன்றைய உலக அரசியல் ஒழுங்கில் நாம் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதற்காகவே நீதியை பெற்றுவிட முடியாது. புவிசார் அரசியல் நலன்களுக்கு கட்டுப்பட்டிருக்கும் உலக அரசியல் சுழற்சியில் நீதி இலகுவாக கிடைத்துவிடும் என்று நம்பினால், நாம்தான் தவறாக சிந்திக்கின்றோம் என்று பொருளாகும்.

கடந்த பதினைந்து வருட கால அனுபவங்கள் இதனைத்தான், நமக்கு தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. எனவே நமது பயணம் என்பது பல தலைமுறைகளை இணைக்கும் அஞ்சல் ஓட்டம் போன்றது. இந்தத் தலைமுறையின் பயணத்தை நாம் தூரநோக்குடனும் அறிவுபூர்வமாகவும் மேற்கொண்டால்தான், தாயகமும் புலம்பெயர் சமூகமும் ஒரு நேர்கோட்டில் பயணிக்க முடியும். தாயக மக்கள் புலம்பெயர் சமூகத்தின் மீதான நம்பிக்கையை கைவிடுவார்களாயின், அதன் பின்னர் நாம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அவற்றுக்கு எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை.

தாயகம்தான் நமது அத்திவாரம் ;. இந்த புரிதலிருந்தே நமது ஒவ்வொரு விடயத்தையும் திட்டமிட வேண்டும், முன்னெக்க வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில், தாயகத்தின் மேம்பாட்டுக்காக அனைத்து வழிகளிலும் நாம் செயலாற்ற வேண்டும். நீதிக்கான எமது பயணத்தை முன்னெடுக்கும் அதே வேளை, சமூக, பொருளாதார முன்னேற்றங்களை கருத்தில்கொண்டு, தாயகத்தின், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள், நலிவுற்ற சமூகப் பிரிவினர் என அனைத்து தரப்பினரதும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

தேசியம் என்பதை செயற்பாட்டு தளத்தின் ஊடாக முன்னெடுக்கும் உபாயங்கள் தொடர்பில்தான் நாம் கவனம் கொள்ள வேண்டும். அதே வேளை, ஜரோப்பிய நாடுகளில் வேர்கொண்டிருக்கும் நாம், ஜரோப்பிய மற்றும் அமெரிக்க மைய, சர்வதேச முகவர் அமைப்புக்கள், உலகளாவிய சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுவற்கான வாய்ப்பையும், அதற்கான புலமைத்துவ ஆற்றலையும் கொண்டிருக்கின்றோம் ஆனால் அவற்றை நாம் முறையாக கையாண்டிருக்கின்றோமா என்னும் கேள்விக்கு பதில் தேட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கடந்த பதினைந்து வருடகால அனுபவஙகளை உற்றுநோக்கினால், எமது செயற்பாடுகள் அதிகம் எமக்குள் உரையாடுவதாகவே மட்டுப்பட்டிருக்கின்றது. இந்த நிலைமையை நாம் மாற்றியமைக்க வேண்டும். புலம்பெயர் சமூகத்திடம் பல ஆற்றல்கள் இருக்கின்றன. ஒரு அரசிற்குரிய வாய்ப்புக்கள் எமக்கு இல்லாவிட்டாலும் கூட, மேற்குலக தாராளவாத ஜனநாயக செல்நெறிக்குள் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. அந்த வாய்ப்புக்களை நாம் முறையாக பயன்படுத்தினால், சிறிலங்கா அரசும் எங்களை நோக்கி வரக் கூடிய கூூழலை ஏற்படுத்த முடியும்.

தாயகத்துடன் தடையற்ற வகையில் ஊடாடக் கூடிய ஆற்றலுடன் நாம் இருக்க வேண்டிய கட்டாயமானதாகும். தாயகத்திலுள்ள அரசியலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், புத்திஜீவிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றோடு தடைகளற்ற வகையில், இணைந்து பணியாற்றக் கூடிய சூழலை நாம் பேணிப்பாதுகாக்க வேண்டும். அவ்வாறானதொரு அமைப்புசார் செயற்பாடு எங்களுக்கு கட்டாயம் தேவை. ஏனெனில், தாயகத்திற்கும் புலம்பெயர் சூழலுக்குள் இடையிலான செயற்பாட்டுரீதியான தொடர்புகள்தான் நமது இயங்குநிலைக்கான அஸ்திபாரமாகும். அந்த அஸ்திபாரத்தை பேணிப்பாதுகாத்தால்தான், தாயகம் நம்முடன் நம்பிக்கைமிக்க உறவில் நீடிக்கும். இந்த உறவில் தொய்வுநிலை ஏற்பட்டால் அதன் பின்னர் புலம்பெயர் செயற்பாடுகளுக்குப் பெறுமதியில்லாது போய்விடும்.

கடந்த பதினைந்து வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு விடயங்களை ஆராய்ந்ததன் அடிப்படையிலும் – அதே வேளை, தனிப்பட்டரீதியில் தாயகத்திலும் புலத்திலும் எங்களுக்குள்ள செயற்பாட்டுத் தொடர்புகளின் விளைவாகவுமே இந்த விடயங்களை உங்கள் முன்வைக்கின்றேன்.

இங்கு சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் கடின உழைப்பால் மட்டுமே சாத்தியப்படும். அதே வேளை புலம்பெயர் சூழலிலுள்ள பல்வேறு துறைசார் நிபுனர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியலாளர்கள் அனைவரும் ஒன்றிணையும் போதுதான் நாம் குறிப்பிடும் இலக்கு நோக்கிப் பயணிக்க முடியும். இந்தப் புதிய அமைப்பானது, அவ்வாறானதொரு பயணத்தை நோக்கிச் செல்வதற்கான ஒரு முதல் நகர்வாகும். சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல், இந்த புதிய அமைப்பின் இலக்குடன் தாயகத்தின் மீட்சிக்கான அர்ப்பணிப்புள்ளவர்கள் அனைவரும் கரம் கோர்க்கும் போது, எங்கள் எண்ணம் நிச்சயம் ஈடேறும்.

நாம் தொடர்ந்தும் முயற்சிப்போம். விழ, விழ முயற்சிப்போம். நமது தேச விடுதலைக்காக, தங்களை ஆகுதியாக்கியவர்களின் தியாகம் எங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.” என்று தனது தலைமையுரையில் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

மேற்படி புதிய அமைப்பான “அனைத்துலகத் தமிழர் பேரவை” அமைப்பின் அங்குரார்ப்பன வைபவம் டொரென்டோ மாநகரில் கடந்த 8ஆம் திகதி (னுநஉநஅடிநச 8 2024) ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. தாயகத்தை நேசிக்கின்ற கனடா வாழ் மக்கள் மாத்திரமன்றி உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இணைய வழியாகவும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் “அனைத்துலகத் தமிழர் பேரவை” அமைப்புடன் இணைந்து பணியாற்றவும் உறுதியளித்தனர்.

புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் நூற்றுக் கணக்கான அமைப்புகள் தாயகத்தை நோக்கிய அரவணைப்புக் கரங்களுடன் தமிழ் மக்களின் விடுதலை மற்றும் தாயகத்தின் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளிலும் அரசியல் கட்டமைப்புக்களை முன்னோக்கி நகர்த்துவதிலும் பணியாற்றி வருகின்றன. இந்த ஒரு பின்னணியில் இன்னும் ஒரு அமைப்பு தேவையா என்ற கேள்விகள் எழும்பலாம்.

2009 ஆம் ஆண்டில் தாயக மண்ணில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் நகர்வுகள் மிக வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசிய அவசரத் தேவைகளுக் கூடே தமிழ் மக்களின் இனப் பரம்பலை மீளக் கட்டி எழுப்ப வேண்டிய தேவை புலம்பெயர் தமிழ் மக்களிடையே விஷ்வரூபம் எடுத்து நிற்கின்றது. இதற்கும் அப்பால் தாயக “தமிழர் அரசியல்”; என்பது திசை மாறியதன் விளைவு இந்த அரசியல்மீது தாயக மக்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. இதனால் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தாயக மண்ணில் நேரடியாக நிலை கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது. இதனை அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்த ஒரு பின்னணியில் “அனைத்துலகத் தமிழர் பேரவை” அமைப்பின் வருகை முக்கியத்துவம் பெறுகின்றது என்பதுதான் டொரென்டோ மாநகரில் நடைபெற்ற “அனைத்துலகத் தமிழர் பேரவை” அமைப்பின் அங்குரார்ப்பன வைபவத்தில் கலந்து கொண்டோரினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களினதும் ஏகோபித்த முடிவாக அமைந்தது.

“அனைத்துலகத் தமிழர் பேரவை” அமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ள நிமால் விநாயகமூர்த்தி கருத்துரைக்கையில் 2009 க்குப் பின் ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் சிவப்பு எச்சரிக்கையாகும். “தாயகம்”; என்பது தாயகத்தில் உள்ள மக்களுக்கு மாத்திரமல்ல புலம்பெயர் மக்களுக்கும் அத்திவாரமாகும். தாயக மண்ணின் அத்திவாரம் அசைக்கப்படுவதையும் தகர்க்கப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது. குறிப்பாக புலம்பெயர் சமூகம் இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதனை இலக்காகக் கொண்டே”அனைத்துலகத் தமிழர் பேரவை” அமைப்பு உருவாக்கம் பெற்றுள்ளது. இதனை முன்னோக்கி நகர்த்த புலம்பெயர் தமிழர்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியம் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் இருந்து வருகைதந்நத சட்டத்தரணி விக்னேஸ்வரன் தனது வாழ்த்துரையில்

” போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழ் மக்கள் தலைமை இன்றி அரசியல் அநாதைகளாக உள்ளனர். தாயக மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியதாக மாறி விட்டது. கடந்தகால தியாகங்கள ;மறக்கப்பட்டுள்ளன. தியாகங்கள் செய்தவர்களும் அதற்கு உறுதுணையாக இருந்து தியாகங்களைச் செய்த தாயக மக்களும் புறந்தள்ளப்பட்ட நிலையில் தமிழ்த் தேசியமே கேள்விக்குள்ளாக்பட்டுவிட்டது. இதற்கும் அப்பால் தமிழ்த் தேசியம் ன்பது “நாடாளுமன்ற மாகாணசபைகளுக்கான கதிரைகளுக்கான “தேசியமாக” மாறிவிட்டது. இத்தகைய அபாயகரமான போக்கில் இருந்து தாயகமும் தமிழ்த் தேசியமும் காப்பாற்றப்பட்டாக வேண்டும். இதற்கு “அனைத்துலகத் தமிழ் பேரவை” அமைப்பின் வருகை அவசியமாகுகின்றது என்று குறிப்பிட்டார்.

மேற்படி அறிமுகக் கருத்தரங்கில் இணைய வழியூடாகக் கலந்து கொண்டவர்களில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தனது வாழ்த்துரையில் ஈழத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டியது அவசர அவசியத் தேவையாக இருக்கின்றது.தமிழ் மக்களின் குறிப்பாக தாயக மண்ணின் பொருளாதார சமூக மேம்பாடு பண்பாடு மேம்படுத்தப்படல் வேண்டும். தாயக அரசியல் கபளீகாரம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஈழத் தமிழர் என்ற வகையில் புலத்திலும் தாயகத்திலும் ஒன்றிணைய வேண்டும். இதனை முன்னெடுக்க “அனைத்துலகத் தமிழர் பேரவை” அமைப்பின்” வருகை அவசியமானது எனக் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து கலந்து கொண்ட பேராசிரியர் செல்வநாதன் இளையதம்பி கருத்துரைக்கையில் தமிழர் போராட்டத்தை முன் நோக்கி நகர்த்த ஐந்து முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டார்.

தாயகத்தில் மக்கள் தொகை குறைவடைந்து கொண்டு போகின்றது. மறுபுறம் தமிழர்களின் இனப்பரம்பல் பறி போய்க் கொண்டிருக்கின்றது. மக்கள் தொகை இன்றி போராட்டத்தை நகர்த்த இயலாது. கூடுதலான பிள்ளைகளைப் பெற்றால் பராமரிப்பது கடினம் என்ற நிலையில் தாயக மக்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று இரண்டு பிள்ளைகளுடன் நிறுத்திக் கொள்கின்றனர்.எனவே கூடுதல் பிள்ளைகளைப் பெறுபவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படல் வேண்டும். இல்லையேல் இன்னும் இரண்டொரு வருடங்களில் தாயகத் தமிழர் இனவிகிதாசாரத்தில் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்படுவர்.

.பெரும்பாலான இளைஞர்கள் யுவதிகள் வெளிநாடு போக விரும்புகின்றனர். தாயகத்தில் பொருளாதாரம் கட்டி எழுப்பப்படல் வேண்டும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படல் வேண்டும். பொதுத் தொழில் கட்டமைப்பு தனியார் தொழிற் துறை என்பன கட்டி எழுப்பப்பட வேண்டும். தாயக விவசாயம் மேம்படுத்தப்பட வேண்டும்.

தாயகக் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில பாடசாலைகள் கூடுதலான வளங்களை புலம் பெயர் அமைப்புக்களிடம் இருந்து பெறுகின்றன. பெரும்பாலான பாடசாலைகள் போதிய அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகின்றன.இந்த நிலை மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆரம்பக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகக் கல்வி வரை தமிழ் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

தாயக மக்களின் வாழ்வாதாரம் கட்டி எழுப்பப்பட வேண்டும். வதிவிட வசதியை உறுதிப்படுத்துவதுடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதுடன் மக்கள் நிம்மதியாக வாழ உதவி செய்ய வேண்டும். தாயகத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கின்றன அவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும். யூதர்கள் போன்று தாயக பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். தாயகப் பொருளாதாரத்தைக் கட்டி ழுப்பினால் மக்கள் தாமாக அரசியல் செய்வர். என்ற தனது தெளிவான உரையில் பல அவசியமான விடயங்களை எடுத்துரைத்தார்.

தமிழ்நாட்டிலிருந்து அங்கு உரையாற்றிய ராமு மணிவண்ணன் தமது வாழ்த்துரையில் ” 2009 க்குப் பின் தமிழர்களின் தலைமையில் ஒரு வெற்றிடம் உள்ளது. வரலாறு கற்றுத்தந்த பாடம் என்ன? இன்றும் ஈழத் தமிழர்கள் தேசிய அடையாளத்தையும் வாழ்வாதாரத்தையும் தேட வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இணைந்து செல்ல வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் அவர்கள் தனது வாழ்த்துரையில் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்று தொடர்ச்சியாகப் பேசி வருகின்றோம் ஆனால் இவ்வாறான முக்கிய அமைப்புக்களின் தோற்றும் இடம்பெறுகின்றபோது இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மத்தியில் முதலில் ஒன்றுமை அவசியமானது. ஏனென்றால் இந்த அமைப்பை இறுதிவரை கொண்டு செல்வது பாதிக்கப்பட்ட எமது தமிழ்ச் சமூகத்திற்கு முக்கியமான ஒன்றாகும் என்று தெரிவித்து தொடர்ந்து “அனைத்துலகத் தமிழர் பேரவை” அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து லிங்கஜோதி வினாசித்தம்பி ரஜீவ் முத்துராமன்பிரசன்னா பாலச்ந்திரன் பாலச்சந்திரன் நாகலிங்கம் மற்றும் பலரும் கருத்துரை வழங்கினர்.வாழ்த்துரைகளை வழங்கினர். இந் நிகழ்ச்சியை கென் கிருபா ஒறுங்கிணைத்து வழிநடத்தினார். இறுதியில் மரியராசா மரியாம்பிள்ளை நன்றியுரை வழங்கினார்.

இந்த அறிமுகக் கூட்டம் கனடா வாழ் தமிழ் மக்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மத்தியில் நம்பிக்;கைகளை ஏற்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்