LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைனில் ரஷ்யாவின் ஆளில்லா விமானம் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

Share

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை ரஷியா முதலில் தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. இதன் பின்னர் அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. இது போரை தீவிரப்படுத்தும் செயல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே தீவிர போரானது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கீவ் நகர் அருகே குடியிருப்பு கட்டிடம், 8 வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் பல்வேறு கார்கள் மீது ரஷியாவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கீவ் நகரின் மத்திய பகுதியில் நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் என மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளனர். எனினும், ரஷிய அதிகாரிகள் கூறும்போது, உக்ரைனில் இருந்து நள்ளிரவில் ஏவப்பட்ட 121 ஆளில்லா விமானங்களை எங்களுடைய வான் பாதுகாப்பு சாதனங்கள் தடுத்து நிறுத்தி, அழித்தன என தெரிவித்தனர். ரஷியாவின் மாஸ்கோ மற்றும் அதனருகே அமைந்த பகுதிகள் உள்பட 13 பகுதிகள் மீது இந்த ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதுதவிர, குர்ஸ்க், பிரையான்ஸ்க், பெல்கரோடு மற்றும் ரஷியாவுடன் இணைக்கப்பட்ட கிரீமியா தீபகற்பம் பகுதிகளை இலக்காக கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.