LOADING

Type to search

இந்திய அரசியல்

“ஒரே நாடு, ஒரே தேர்தல் மத்திய அரசின் முதன்மையான நோக்கம்” – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

Share

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.

     நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அதற்காக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் நாடாளுமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அரசு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார். நாடாளுமன்றம் வந்தடைந்த குடியரசு தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. செங்கோல் முன்னதாக கொண்டு செல்லப்பட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். குடியரசு தலைவரை குடியரசு துணை தலைவர், மக்களவை சபாநாயகர், பிரதமர் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகியது. அப்போது அவர் பேசியதாவது, “சில தினங்களுக்கு முன்பு நாட்டில் 76-வது குடியரசு தினத்தை நிறைவு செய்தோம். இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கர் உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்துகிறேன். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய திட்டங்கள் அதிவேகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 3 கோடி குடும்பங்களின் இலவச வீட்டுக்கனவு நனவாகி உள்ளது. லட்சக்கணக்காக மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு மும்மடங்கு வேகத்தில் செயல்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுத்துவரும் மத்திய அரசுக்கு பாராட்டுக்கள். 2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்து நிற்கிறது. விவசாயிகள், பெண்கள் நலன் கருதி மத்திய அரசு பணியாற்றி வருகிறது. பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகள் வங்கிக்கணக்கில் பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் முதன்மையான நோக்கம். வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. இன்று பெண்கள் அதிகம் பேர் போர் விமானங்களை இயக்குகின்றனர், காவல்துறையில் சேர்கின்றனர், கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் உள்ளனர். ஒலிம்பிக் பதக்கங்களையும் வென்று நமது நாட்டிற்கு நம் மகள்கள் பெருமை சேர்க்கின்றனர். செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உலகிற்கே இந்தியா ஒரு வழிகாட்டியாக உள்ளது. இன்றைய இளைஞர்கள் ஸ்டார்ட்அப் தொடங்கி விளையாட்டு, விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாஆல் மிஷ்சன் தொடங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா இன்று முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் யூபிஐ பரிவர்த்தனை முறையின் வெற்றியால் உலகின் வளர்ந்த நாடுகளும் ஈர்க்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான கருவியாக மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை இணைப்பு திட்டம் நிறைவடைந்துள்ளது. இப்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில்பாதை மூலம் இந்த நாடு இணைக்கப்படும். இந்தியாவின் மெட்ரோ ரயில் நெட்வொர்க் இப்போது 1000 கி.மீ. என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது. இதன்மூலம் உலகின் 3வது பெரிய மெட்ரோ நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியா உருவாகியுள்ளது” இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.