ஆளுநர் ஆர்.என்.ரவி-ஐ நீக்கக் கோரிய மனு தள்ளுபடி… உச்சநீதிமன்றம் அதிரடி
Share
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஜெயசுகின், “ஆளுநர் உரையின் போது தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் கூறி சட்டசபையிலிருந்து வெளியேறுவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
திராவிட பண்பாடுக்கு எதிராகவும் ஆளுநர் தொர்ந்து பேசி வருகிறார்” என்ற வாதத்தை முன்வைத்தார். அதற்கு நீதிபதி, “ஏற்கனவே ஆளுநர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் மனுவில் வைத்திருக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது. அரசியலமைப்பு நடைமுறைக்கு புறம்பாக கோரிக்கை உள்ளது. எப்போதெல்லாம் ஆளுநர் விவகாரம் தொடர்பான பிரச்னைகள், முரண்பாடுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பித்து வருகிறது. எனவே ஆளுநரை நீக்க வேண்டும் என்ற இந்த மனுவை ஏற்க முடியாது” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.