“காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Share
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்,
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால் அதன் மீது பெட்ரோல் குண்டு விழுந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
என்ன தான் நடக்கிறது இந்த திமுக ஆட்சியில்? ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா? நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு ஆட்சி நடத்திவிட்டு, “சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார். “காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை” என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு தள்ளிவிட்ட திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.