”தெற்கிலிருந்து உதித்த சூரியன் அண்ணா” – கனிமொழி எம்.பி.
Share
மறைந்த அண்ணாவின் நினைவு நாளையொட்டி கனிமொழி எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட அமைதி பேரணி அண்ணா சதுக்கம் வரை நடைபெற்றது.
இந்த பேரணியில் துணை முதலமைச்சர் உள்ளிட்ட திமுகவின் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அனைத்து அணியினரும் பங்கேற்றனர். பின்னர், அண்ணா நினைவிடத்தை அடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். இதேபோல், தமிழ்நாட்டின் பல இடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் அண்ணா சிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கனிமொழி எம்.பி. அண்ணாவின் நினைவு தினம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழினத்தைக் காக்க தெற்கிலிருந்து உதித்த ‘சூரியன்’ பேரறிஞர் அண்ணா. மாநில உரிமையை மூச்சாகக் கொண்டு, கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்த சுயமரியாதைக்காரர். திராவிட இன உரிமைப்போரின் கொள்கை வழிகாட்டியாகவும், இன்றும் ஆதிக்க சக்திகளுக்கு சிம்மச் சொப்பனமாக விளங்கும் தன்னிகரற்ற தலைவரின் கொள்கையைப் பின்பற்றி, அதிகாரக்குவியலை எதிர்த்து குரல் கொடுப்போம், மாநில உரிமையை வென்றெடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.