LOADING

Type to search

இந்திய அரசியல்

டில்லி சட்டசபை தேர்தல்: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

Share

டில்லியில் நாளை சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. கட்சிகள் அனைத்தும் ஒன்றின் மீது மற்றொன்று வைக்கும் குற்றச்சாட்டுகளால் பிரசார கூட்டங்களில் அனல் பறக்கிறது. இந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. எனவே தலைநகர் முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் வேகமெடுத்து உள்ளது. பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், டில்லி முன்னாள் முதல் அமைச்சர் கெஜ்ரிவால் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். கெஜ்ரிவால் அந்த காணொளியில் கூறியிருப்பதாவது: பாஜக தனது குண்டர்களையும், டில்லி காவல்துறையும் பயன்படுத்தும். வாக்காளர்களை அச்சுறுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள். குறிப்பாக குடிசைப்பகுதிகளில் உள்ள மக்களை அச்சுறுத்துகிறார்கள்.குடிசைப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து விரலில் மை வைத்து விடுகிறார்கள். அவர்கள் வாக்களிக்க முடியாதபடி இப்படி செய்கிறார்கள். எனவே, மக்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், விரலில் மை வைக்க விடாதீர்கள்” என்றார். தேர்தல் பிரசாரம் மாலையுடன் ஓய உள்ள நிலையில், பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள காணொளி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.